இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி: திருச்சியில் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம்

இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருச்சியில் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தினர்.

Update: 2019-04-24 23:00 GMT
திருச்சி,

இலங்கையில் கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று, கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு, இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டிக்கும் வகையிலும், உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் திருச்சி மறை மாவட்ட கிறிஸ்தவர்கள் மற்றும் மனிதநேய அமைப்பினர் சார்பில் திருச்சியில் நேற்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தியும், கருப்பு பட்டை அணிந்தும் மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. அஞ்சலி நிகழ்ச்சிக்காக, திருச்சி பாரதியார் சாலையில் உள்ள புனித ஜேம்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் கிறிஸ்தவர்கள் ஒன்று திரண்டனர். பின்னர், அங்கு இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருச்சி மறைமாவட்ட பேராயர் சந்திரசேகர் தலைமையில் ஜெபம் நடத்தப்பட்டது.

பின்னர் அங்கிருந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கன்னியாஸ்திரிகள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் காதர் பள்ளிவாசல் இமாம் முகமது மீரான் உள்ளிட்ட முஸ்லிம்களும் பங்கேற்றனர்.

ஊர்வலம் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி, பாரதியார் சாலை, தலைமை தபால் நிலையம் வழியாக மேலப்புதூர் தூய மரியன்னை பேராலய வளாகத்தை அடைந்தது. பின்னர் அங்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இலங்கையில் நடந்தது போன்ற குண்டுவெடிப்பு சம்பவம் இனிவரும் காலங்களில் வேறு எந்த இடத்திலும் நிகழக்கூடாது. தீவிரவாதிகள் தங்களது குணங்களை மாற்றிட வேண்டும். தீவிரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் கண்டிக்கிறோம் என்று மறைமாவட்ட பேராயர் சந்திரசேகர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்