இலங்கையில் குண்டு வெடிப்பு எதிரொலி: தேவாலயங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Update: 2019-04-24 22:30 GMT
திருவண்ணாமலை,

ஈஸ்டர் பண்டிகையையொட்டி இலங்கையில் தேவாலயங்கள், 5 நட்சத்திர ஓட்டல்கள் என பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பு இலங்கை மட்டுமல்லாமல் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்திலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

உளவுத்துறை எச்சரிக்கையின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இரவு நேர ரோந்து சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சந்தேக நபர்கள் தேவாலய பகுதியில் சுற்றித் திரிந்தாலோ, ஆலய பகுதியில் கேட்பாரற்று மர்ம பொருள் கிடந்தாலோ அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பாதிரியார்களிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆலயங்களில் பிரார்த்தனை நேரம் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்