சேவை குறைபாடு தனியார் நிதி நிறுவனத்துக்கு அபராதம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு

சேவை குறைபாடு ஏற்படுத்திய தனியார் நிதி நிறுவனத்துக்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2019-04-24 22:30 GMT
நெல்லை, 

நெல்லை பேட்டை கருமாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் வக்கீல் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த ஒரு தனியார் நிதி நிறுவனம், சொத்தின் பெயரில் குறைந்த வட்டிக்கு பணம் கொடுப்பதாக விளம்பரம் செய்தது. இதை நம்பி நான், அந்த நிதி நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினேன். கடன் வழங்குவதாக அந்த நிறுவனம் உறுதி அளித்தது. ரூ.1 லட்சத்துக்கு ரூ.3,200 ஆவண செலவு ஆகும் என நிதி நிறுவனம் கூறியது.

அதை நம்பி நான் பணம் கட்டினேன். பின்னர் அந்த நிதி நிறுவன ஊழியர் என்னை தொடர்பு கொண்டு உங்களுக்கு கடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே ஆவண செலவு, சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என கூறினார். நானும், மொத்தம் ரூ.29 ஆயிரத்து 200-ஐ வங்கி மூலம் செலுத்தினேன். ஆனால் இதுவரை எனக்கு தனியார் நிறுவனம் கடன் வழங்கவில்லை. அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் செலுத்திய பணத்தை திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுவை நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி தேவதாஸ், உறுப்பினர்கள் முத்துலட்சுமி, சிவமூர்த்தி ஆகியோர் விசாரித்து தீர்ப்பு கூறினர். தீர்ப்பில், “முத்துக்குமார் செலுத்திய ரூ.29 ஆயிரத்து 200-ஐ திரும்ப கொடுக்க வேண்டும். சேவை குறைபாடு ஏற்படுத்தியதற்காக கடந்த மாதம் 8-ந் தேதி முதல் 6 சதவீத வட்டியை சேர்த்து கொடுக்க வேண்டும். மன ஊளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.15 ஆயிரமும், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரமும் சேர்த்து மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் வழங்க வேண்டும். ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும். அப்படி தவறினால் 6 சதவீதம் வட்டியுடன் தனியார் நிதி நிறுவனம் வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்