மணக்குடியில் மீனவர் வெட்டிக் கொலை: கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

மணக்குடி மீனவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2019-04-25 22:15 GMT
மேலகிருஷ்ணன்புதூர்,

சுசீந்திரம் போலீஸ் சரகம் மணக்குடி லூர்து மாதா தெருவை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 35). மீன்பிடி தொழிலாளி. இவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்குள்ள குருசடி பகுதியில் இரவு தூங்கினார். நள்ளிரவு நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கிதியோன் அடித்த டார்ச்லைட் வெளிச்சம், வின்சென்ட் மனைவி முகத்தில் பட்டது. இதனை வின்சென்ட் தட்டிக் கேட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட் டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த கிதியோன் உள்ளிட்ட சிலர் வின்சென்டை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதுதொடர்பாக சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தனிப்படை அமைப்பு

கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி வின்சென்ட் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகுதான் வின்சென்ட் உடலை வாங்கி மணக்குடிக்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். இந்த கொலையை தொடர்ந்து அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதற்கிடையே கொலை சம்பவத்தில் தொடர்புடைய கிதியோன், ஜஸ்டின், லாடஸ், அவருடைய மகன்கள் அகில், நிகில், ஆன்டணி, அஸ்வின், பாண்டியன் ஆகிய 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர்.

மேலும், கொலையாளிகளை பிடிக்க சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சித்தார்த் சங்கர்ராய், சப்-இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தனிப்படை போலீசார் கொலையாளிகள் 8 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்