இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி: கோவில், தேவாலயங்களில் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் உத்தரவு

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியால் பெங்களூருவில் கோவில், தேவாலயங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

Update: 2019-04-25 22:45 GMT
பெங்களூரு,

ஈஸ்டர் தினமான கடந்த 21-ந் தேதி இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் வெடிகுண்டுகள் தொடர்ந்து வெடித்தன. இதில் 350-க்கும் அதிகமானவர்கள் இறந்தனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இன்னும் இலங்கையில் ஆங்காங்கே அவ்வப்போது வெடிகுண்டுகள் வெடிக்கின்றன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதன் எதிரொலியாக பெங்களூருவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக நேற்று பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம்

பெங்களூரு நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. கோவில்கள், தேவாலயங்கள், பிரார்த்தனை கூடங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அதன் நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அதன் நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

சந்தேகப்படும் படியாக சுற்றும் நபர்கள் மற்றும் அனாதையாக கிடக்கும் பொருட்கள் குறித்து போலீசில் தகவல் அளிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நபரையும், அவர்கள் வைத்திருக்கும் உடைமைகளையும் தீவிரமாக சோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சோதனைகளுக்கு ‘ஸ்கேனர்கள்’ பயன்படுத்த வேண்டும்.

நிரந்தரமாக மேற்கொள்ள...

ஓட்டல், தங்கும் விடுதிகளில் தங்குபவர்களிடம் அடையாள அட்டை விவரங்களை கேட்டு பெறுதலை உறுதி செய்ய வேண்டும். கோவில்கள், தேவாலயங்கள், பிரார்த்தனை கூடங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகளை நிர்வகிக்கும் நிர்வாகிகள் அருகே உள்ள போலீஸ் நிலையங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை தற்காலிகமாக செய்யாமல் நிரந்தரமாக மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பாக போலீசார் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்