டிராக்டர்-அரசு பஸ் மோதல் 2 பெண்கள் உள்பட 3 தொழிலாளர்கள் சாவு

பல்லாரி அருகே நேற்று டிராக்டரும், அரசு பஸ்சும் மோதிக்கொண்டதில் 2 பெண்கள் உள்பட 3 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-04-25 23:03 GMT
பல்லாரி,

பல்லாரி மாவட்டம் ஒசப்பேட்டே தாலுகா பசவனதுர்கா கிராமத்தில் உள்ள ஏரியை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணி செய்யும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சிலகஹட்டி கிராமத்தில் உள்ள 30 தொழிலாளர்கள் டிராக்டர் ஒன்றில் நேற்று காலையில் பசவனதுர்கா ஏரியை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

ஹாருவனஹள்ளி அருகே அவர்கள் சென்றபோது டிராக்டரும், கர்நாடக அரசு பஸ்சும்(கே.எஸ்.ஆர்.டி.சி.) மோதிக்கொண்டன. இதில், டிராக்டர் கவிழ்ந்தது. இதனால் டிராக்டரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள்.

3 பேர் சாவு

இதுபற்றி அறிந்தவுடன் மரியம்மனஹள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, டிராக்டரில் பயணித்த 12 பேர் படுகாயமும், 16 பேர் காயமும் அடைந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் மீட்ட போலீசார் சிகிச்சைக்காக ஒசப்பேட்டே அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் மேல் சிகிச்சைக்காக பல்லாரி ‘விம்ஸ்’ ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் எர்ரிசாமி(வயது 35), ரேணுகம்மா(38) ஆகியோர் சம்பவ இடத்திலேயும், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் மல்லம்மா(40) என்பவரும் இறந்தது தெரியவந்தது. இறந்த 3 பேரும் சிலகஹட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதையடுத்து இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஒசப்பேட்டே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த பயணிகளுக்கு அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து மரியம்மனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்