அரியாங்குப்பம் அருகே தச்சு தொழிலாளி கொலையில் 4 பேர் கைது போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

அரியாங்குப்பம் அருகே தச்சு தொழிலாளி கொலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.

Update: 2019-04-25 23:35 GMT
அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் சண்முகம் நகரை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 36). தச்சு தொழிலாளி. ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவந்தார். இவருக்கு சூர்யா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் நோணாங்குப்பத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். நோணாங்குப்பம் தொடக்கப்பள்ளி முன்பு வந்தபோது, மர்ம கும்பல் அவரை வழிமறித்து கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. இதுபற்றி தகவல் அறிந்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டுகள் ஜிந்தா கோதண்டராமன், ரங்கநாதன், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி ஆகியோர் விரைந்து வந்து, கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

நோணாங்குப்பத்தை அடுத்த தமிழக பகுதியான இருசம்பாளையத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சந்திரன் என்பவருக்கும், நாகராஜுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்துவந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சந்திரன் கொலை செய்யப்பட்டார். இந்த குற்றவாளிகளுக்கு நாகராஜ் பண உதவி செய்து வந்தார். இதை அறிந்த சந்திரன் மகனின் நண்பரான அரியாங்குப்பத்தை சேர்ந்த லோகு என்கிற லோகநாதன், நாகராஜ் மனைவி சூர்யாவின் தம்பியான தமிழ்பிரியனை கண்டித்தார். இதுபற்றி தெரியவந்ததும் கடந்த சில நாட்களுக்கு முன்பு லோகுவின் வீட்டுக்கு சென்று அவருக்கு நாகராஜ் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த லோகு கூட்டாளிகளுடன் சேர்ந்து நாகராஜை வழிமறித்து வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

புதுவை வேல்ராம்பட்டு ஏரியில் லோகு (30) மற்றும் கூட்டாளிகளான அரியாங்குப்பம் உதயகுமார் (30), மணிகண்டன் (24), முத்துக்குமார் (38) ஆகியோர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று அவர்கள் 4 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்