15 ஆண்டுகளுக்கு முன்பு நூதனமுறையில் ரூ.1,000 மோசடி: முதியவருக்கு 2 ஆண்டு ஜெயில்

15 ஆண்டுகளுக்கு முன்பு நூதன முறையில் ரூ.1,000 மோசடி செய்த முதியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்ட பெருந்துறை நீதிமன்ற தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்தது.

Update: 2019-04-28 23:00 GMT

சென்னிமலை,

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள முகாசி அனுமன்பள்ளி புளியங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் நல்லசாமி. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். கடந்த 2000–ம் ஆண்டு இறந்துவிட்டார். இவருடைய மகன் சுப்பிரமணி. நல்லசாமி இறப்பதற்கு முன்பு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு ரூ.21 ஆயிரம் கடன் கொடுத்திருந்தார். இந்த பணத்தை தரும்படி ராஜேந்திரனிடம், நல்லசாமியின் மகன் சுப்பிரமணி பல முறை கேட்டு உள்ளார்.

ஆனால் அவர் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார். மேலும் இந்த பணத்தை மதுரை மாவட்டம் சேடப்பட்டியை சேர்ந்த ராமசாமி (77) என்பவர் கொடுப்பார் என ராஜேந்திரன் கூறினார். இதைத்தொடர்ந்து ராமசாமி, தன்னுடைய நண்பரான ராஜசேகரை அழைத்து கொண்டு முகாசி அனுமன்பள்ளியில் உள்ள சுப்பிரமணி வீட்டுக்கு வந்து உள்ளார். ஆனால் அவர் ராஜேந்திரன் கொடுக்க வேண்டிய பணத்தை சுப்பிரமணியத்திடம் கொடுக்கவில்லை.

அதற்கு மாறாக சுப்பிரமணியிடம், ராமசாமி தான் வைத்திருந்த 5 காகிதத்தை எடுத்து ஒரு திரவத்தில் நனைத்து ரூபாய் நோட்டாக மாற்றி காட்டியுள்ளார். மேலும் நீ (சுப்பிரமணி) ரூ.5 ஆயிரம் கொடுத்தால் அதை நான் ஒரு கட்டு பணமாக மாற்றி காட்டுகிறேன் என்று கூறினார். ஆனால் சுப்பிரமணி ரூ.1,000 கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட ராமசாமி, நாங்கள் ஊருக்கு போய்விட்டு திரும்பி வரும்போது ரூ.5 ஆயிரமாக தருகிறோம் என கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்கள் தன்னை நூதன முறையில் மோசடி செய்து ஏமாற்றி விட்டனர் என்பதை சுப்பிரமணி உணர்ந்தார்.

இதைத்தொடர்ந்து அவர் இதுகுறித்து வெள்ளோடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமசாமி, அவருடைய நண்பர் ராஜசேகர் ஆகியோரை கடந்த 17–12–2004 அன்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். இதில் ராஜசேகர் உடல் நலக்குறைவால் இறந்தார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த பெருந்துறை நீதிமன்றம் ராமசாமிக்கு 2 ஆண்டுகள் 3 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த 9–10–2009 அன்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் ராமசாமி மேல் முறையீடு செய்தார். மாவட்ட நீதிமன்றமும், பெருந்துறை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. பின்னர் அவர் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். சென்னை ஐகோர்ட்டும் ராமசாமிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை உறுதி செய்து தீர்ப்பு அளித்தது. இதைத்தொடர்ந்து ராமசாமியை வெள்ளோடு போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நூதன முறையில் ரூ.1000–யை மோசடி செய்து ஏமாற்றிய ராமசாமி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்