காஞ்சீபுரம் அருகே 28 கொத்தடிமைகள் மீட்பு

காஞ்சீபுரம் அருகே 28 கொத்தடிமைகள் மீட்கப்பட்டனர்.

Update: 2019-04-28 22:00 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் அருகே வல்லக்கோட்டை பகுதியில் உத்திரமேரூர் வட்டத்தை சேர்ந்த மலையான்குளம், ஆசூர் படூர் உள்ளிட்ட கிராம பகுதிகளை சேர்ந்த 7 குடும்பத்தினர் வல்லக்கோட்டை பகுதியில் மரம் வெட்டும் தொழிலில் கொத்தடிமைகளாக இருப்பதை அறிந்த கொத்தடிமை மீட்பு மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் துரைராஜ், காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணனிடம் புகார் மனு அளித்தார்.

அதன் அடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் காஞ்சனமாலா, துணை தாசில்தார் பூபாலன் உள்ளிட்ட வருவாய் துறையினர் வல்லக்கோட்டை இருளர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு 7 குடும்பங்களை சேர்ந்த 8 ஆண்கள், 8 பெண்கள் 12 குழந்தைகள் உள்பட அனைவரும் மரம் வெட்டும் தொழிலில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு நபரால் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள பள்ளியில் தங்க வைத்தனர்.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காஞ்சீபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமைகளை சப்-கலெக்டர் சரவணன் நேரில் அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்.

அதன்பிறகு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களது மறுவாழ்வுக்கான உதவிகளை அவர் வழங்கினார். இதை பெற்றுக்கொண்ட அவர்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்