திருச்செந்தூர் அருகே விபத்து: நண்பர்கள் 2 பேர் பலி பனைமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது

திருச்செந்தூர் அருகே பனை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி நண்பர்கள் 2 பேர் பலியானார்கள்.

Update: 2019-04-29 22:15 GMT
திருச்செந்தூர்,

நெல்லை பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு கோட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோதண்டராமன் மகன் மீனாட்சி (42) கூலி தொழிலாளி. நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று மதியம் திருச்செந்தூரில் இருந்து நெல்லை செல்லும் ரோட்டில் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

திருச்செந்தூரை அடுத்த ராணிமகராஜபுரம் பாலம் வளைவில் திரும்பியபோது, சாலையின் இடதுபுறமுள்ள பனை மரத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த மீனாட்சி உயிருக்கு போராடியவாறு கிடந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று மீனாட்சியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மீனாட்சியும் இறந்து போனார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், திருச்செந்தூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த ஆறுமுகத்தின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த ஆறுமுகத்துக்கு கோமு என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். மீனாட்சிக்கு பிரம்மு என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

ராணிமகராஜபுரம் பாலம் வளைவில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே, அங்கு எச்சரிக்கை பலகை, ஒளி எதிரொலிப்பான் ஸ்டிக்கர், வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். பனை மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி நண்பர்கள் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்