வாகன சோதனையில் ரூ.10 லட்சம் தங்கம், வெள்ளி பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை

திண்டிவனம் அருகே வாகன சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான 300 கிராம் தங்கம், 6½ கிலோ வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-04-30 23:30 GMT

திண்டிவனம்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ந்தேதி நடைபெற்றது. ஆனாலும் வாக்கு எண்ணிக்கை நாளான வருகிற 23-ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த சலவாதி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி முருகன் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து செஞ்சி நோக்கி வந்த ஒரு காரை மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில், காரில் இருந்தவர்கள் செஞ்சி செவலபுரத்தை சேர்ந்த சிலம்பரசன், சுரேஷ்பாபு என்பதும், அவர்கள் சென்னையில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 300 கிராம் தங்க நகைகள் மற்றும் 6½ கிலோ வெள்ளி நகைகளை செஞ்சியில் உள்ள நகை கடைக்கு எடுத்து சென்றதும், அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து பறக்கும்படை குழுவினர் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து, திண்டிவனம் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்