ராமேசுவரம் கோவில் வடக்கு வாசல் பகுதியில் தீர்த்த டிக்கெட் கவுண்ட்டர்கள் இல்லாததால் பக்தர்கள் கடும் அவதி

ராமேசுவரம் கோவில் வடக்கு வாசல் பகுதியில் டிக்கெட் கவுண்டர்கள் இல்லாததால் தீர்த்தமாடச்செல்லும் பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Update: 2019-05-01 22:15 GMT

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலமான ராமேசுவரத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு அதன்பின்னர் கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடுவது வழக்கம். இந்த நிலையில் கோவிலுக்குள் கிழக்கு வாசல் பகுதியில் அமைந்திருந்த 1 முதல் 6 வரையிலான தீர்த்த கிணறுகள் மிகவும் குறுகலான பகுதியில் அமைந்திருந்ததால் அதிக கூட்டம் வரும்போது பக்தர்கள் நீராட முடியாத நிலை ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் இந்த 6 தீர்த்தக்கிணறுகளும் கோவிலின் வடக்கு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது தீர்த்தமாட செல்லும் பக்தர்கள் வடக்கு வாசல் வழியாக அனுமதிக்கப்பட்டு தெற்குவாசல் வழியாக வெளியேறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுஉள்ளது.

ஆனாலும் வடக்கு வாசல் பகுதிக்கு தீர்த்தக்கிணறுகள் மாற்றப்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அந்த பகுதியில் டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைக்கப்படவில்லை. இதனால் கோவில் ஊழியர்கள் வாசல் அருகில் நின்று கொண்டு தீர்த்தமாடுவதற்காக டிக்கெட்டுகளை கையில் வைத்தபடி பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். மேலும் அதற்கான கட்டணத்தை சாதாரணமான முறையில் அட்டைப்பெட்டிகளில் போட்டு வைக்கின்றனர். ராமேசுவரம் கோவிலுக்கு விடுமுறை நாட்களில் சுமார் 20,000 முதல் 30,000 வரையிலான பக்தர்கள் வந்து தீர்த்தக்கிணறுகளில் நீராடுவார்கள். மற்ற நாட்களில் 5,000 முதல் 8,000 வரையிலான பக்தர்கள் நீராடுவது வழக்கம்.

இந்த நிலையில் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ராமேசுவரத்துக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு வரும் பக்தர்கள் வடக்கு வாசல் பகுதியில் தீர்த்தமாடுவதற்காக நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். ஆனால் அப்பகுதியில் முறையாக டிக்கெட் கவுண்ட்டர்கள் இல்லாததால் எங்கு டிக்கெட் வாங்குவது என்று தெரியாமல் அலைக்கழிப்புக்கு உள்ளாகின்றனர்.

மேலும் கோவில் ஊழியர்களும் பக்தர்களிடம் டிக்கெட் விற்பனை செய்ய மிகவும் சிரமப்படுகின்றனர். பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் ராமேசுவரம் கோவிலில் டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைப்பதற்கு கோவில் நிர்வாகத்தினர் தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகின்றனர். இது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே உடனடியாக வடக்கு வாசல் பகுதியில் டிக்கெட் கவுண்ட்டர்கள் அமைக்கவும், பக்தர்கள் அடையாளம் காணும் வகையில் கட்டண விவரங்களுடன் கூடிய தகவல் பலகை வைக்கவும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்