பரமத்தி வேலூர் பேட்டை புது மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா

பரமத்தி வேலூர் பேட்டை புது மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது.

Update: 2019-05-01 22:45 GMT
பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர் பேட்டை புதுமாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா கடந்த 23-ந் தேதி கோவில் முன்பு கம்பம் நடுதலுடன் தொடங்கியது. 24-ந் தேதி முதல் நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. மேலும் யானை, காமதேனு, சர்ப்பம், அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து வடிசோறு நிகழ்ச்சியும், இரவு அம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, தீ மிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடிய பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

இதையடுத்து ஏராளமான ஆண் பக்தர்கள் கோவிலுக்கு முன்பு தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் ஏராளமான பெண்கள் பூவாரி போட்டுக்கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தலும், மாலை பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சியும், இரவு ஊஞ்சல் உற்சவமும், வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) காலை கம்பம் ஆற்றுக்கு எடுத்து செல்லுதல் நிகழ்ச்சியும், நாளை (வெள்ளிக் கிழமை) மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தீ மிதி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பேட்டை புதுமாரியம்மன் கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்