பானி புயல், கடலூரில் கடல் சீற்றம்

பானி புயல் எதிரொலியால் கடலூரில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் கடற்கரை பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-02 22:45 GMT
கடலூர், 

வங்கக்கடலில் உருவான பானி புயல் தமிழகத்தை நோக்கி வரும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அது மிக தீவிர புயலாக திசை மாறி ஒடிசாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்தது.

அதன்படி கடலூரில் கடந்தசில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருகிறது. வழக்கம்போல் நேற்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. காலை 9 மணிக்கு பிறகு சூரியன் சுள்ளென சுட்டெரித்தது. அனல் காற்று வீசியதால் புழுக்கம் ஏற்பட்டது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். வெப்பத்தின் காரணமாக இளநீர், மோர், பழச்சாறு, குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகி தாகத்தை தணித்துக்கொண்டனர்.

பானி புயல் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் சுமார் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிக்கு இன்று(வெள்ளிக்கிழமை) வரை மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று வழக்கத்துக்கு மாறாக கடலூரில் கடல் சீற்றமாக காணப்பட்டது. ஆக்ரோஷத்துடன் பொங்கி எழுந்த ராட்சத அலை கரையை நோக்கி பல அடி தூரத்துக்கு சீறிப்பாய்ந்தது. இதனால் கடற்கரை பகுதிகளில் மண் அரிப்பு ஏற்பட்டு மண் திட்டு போன்ற காட்சியை பார்க்க முடிந்தது.

மாலை நேரம் கடற்கரைக்கு காற்று வாங்க வந்த பொதுமக்கள் சிலர் மண் திட்டில் அமர்ந்து கடலில் இயற்கை அழகை ரசித்தனர். அப்போது ஆக்ரோஷத்துடன் பொங்கி எழுந்த ராட்சத அலை அவர்கள் மீது மோதியதால் எழுந்து ஓட்டம் பிடித்தனர்.

தற்போது மீன்பிடி தடை காலம் அமலில் இருப்பதால் சிறிய படகுகளில் மீனவர்கள் கரையோர பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர். புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் எதிரொலியால் அவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை.

மேலும் செய்திகள்