ஈரோட்டில் கைது செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்

ஈரோட்டில் கைது செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

Update: 2019-05-02 22:45 GMT
ஈரோடு,

ஈரோடு பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி கொடுத்திருந்த புகார் மனுவில், ‘நான் கல்லூரியில் படித்து வந்தபோது ஈரோடு வில்லரசம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 37) என்பவர் பழக்கமானார். அவர் தன்னை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரது செல்போனில் படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர் அதை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் 2 முறை கர்ப்பமாகி கருவை கலைத்தேன். தற்போது அவருக்கு தெரிந்த நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறி எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். அதன் பேரில் போலீசார் ராதாகிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

இந்த நிலையில் ஈரோடு பகுதியை சேர்ந்த 26 வயது பெண், ‘ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் கொடுத்திருந்த புகார் மனுவில் கூறி இருந்ததாவது:-

எனக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். எனது கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு. அவர் குடிக்க செல்லும் போது ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் அவருக்கு பழக்கமாகி உள்ளார். இதைத்தொடர்ந்து எனது கணவர் அவரை நண்பர் என்று கூறி கடந்த 10 மாதங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

எனது மகனின் பிறந்தநாள் அன்று ராதாகிருஷ்ணன் எனது வீட்டிற்கு வந்தார். அப்போது எனது கணவரும், அவரும் மதுபோதையில் இருந்தனர். இதுகுறித்து நான் கேட்போது எனக்கும், எனது கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தேன்.

அக்கம் பக்கத்தினர் என்னை காப்பாற்றி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது ராதாகிருஷ்ணன் அங்கு வந்து நலம் விசாரித்ததோடு, எனது மகனின் கையில் ரூ.2 ஆயிரத்தை கொடுத்து விட்டு சென்றார். இதன் பின்னர் நான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினேன். அதைத்தொடர்ந்து அவர் எனது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டாயா? என்று கேட்டார்.

அதற்கு நான் வந்து விட்டேன் என்று கூறினேன். இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ணன் எனது வீட்டிற்கு வந்தார். அப்போது நான் தனியாக இருந்தேன். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பின்னரும் அவர் என்னை மிரட்டி 5 முறை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதை நான் வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வந்தேன். தற்போது அவரை பற்றிய செய்தி வெளிவந்த பின்னர் எனது மனதை தைரியப்படுத்திக்கொண்டு எனக்கு நடந்த கொடுமையை தங்களிடம் கூறி உள்ளேன். எனவே அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி உள்ளார்.

ரியல் எஸ்டேட் அதிபர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரை போன்று வேறு ஏதேனும் பெண்களை ராதாகிருஷ்ணன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்