பாளையங்கோட்டையில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 6 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் கொள்ளை
பாளையங்கோட்டையில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் கதவை உடைத்து 6 பவுன் நகை, ரூ.40 பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.;
நெல்லை,
பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் காமாட்சி அம்மன் கோவில் 4-ம் தெருவை சேர்ந்தவர் யோவான். அவருடைய மகன் விஜய் (வயது 42). இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கோடை விடுமுறைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்தநிலையில் மர்ம நபர்கள் விஜய்யின் வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 6 பவுன் நகைகளையும், ரூ.40 ஆயிரத்தையும் கொள்ளையடித்து விட்டு, வீட்டில் இருந்த 2 மடிக்கணினியையும் திருடிச் சென்று விட்டனர்.
நேற்று காலை அவரது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் இதுபற்றி போலீசாருக்கும், விஜய்க்கும் தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.