இலங்கை குண்டு வெடிப்பு: உளவுத்துறை அதிர்ச்சி தகவல் பெங்களூருவில் உச்சகட்ட பாதுகாப்பு பஸ், ரெயில், விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு

இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகள் பெங்களூருவுக்கு வந்து சென்ற அதிர்ச்சி தகவலை உளவுத்துறை வெளியிட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பெங்களூருவில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பஸ், ரெயில் மற்றும் விமான நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2019-05-04 23:15 GMT
பெங்களூரு,

கடந்த மாதம் 21-ந் தேதி நாடு முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. அன்றைய தினம், இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 250-க்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியாவிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல்கள் பரவின. இதனால் இந்தியாவில் முக்கியமான இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதேபோல் கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் செயல்பட வேண்டும் என்று பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுறுத்தினார்.

அதன்படி, பெங்களூரு நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் போலீசாரின் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதோடு, பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. அத்துடன், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். தனியார் நிறுவன பாதுகாவலர்களை பணியமர்த்த வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளை அதன் நிர்வாகிகளுக்கு போலீசார் வழங்கினர்.

இந்த நிலையில் இலங்கை தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் பெங்களூருவுக்கு வந்து சென்றுள்ளதாகவும், இதனால் பெங்களூருவில் உச்சக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும், போலீசார் உஷாராக செயல்பட வேண்டும் என்றும் மத்திய உளவுத்துறை, கர்நாடக போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெங்களூருவுக்கு பயங்கரவாதிகள் வந்து சென்று இருப்பதாக மத்திய உளவுத்துறை கூறி இருப்பது பெங்களூரு மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பெங்களூருவில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

“இலங்கை வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து உளவுத்துறை தகவலின் பேரில் பெங்களூரு நகரில் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். விமான நிலையம், ரெயில் நிலையம், மெட்ரோ நிலையம், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் தீவிர சோதனை செய்யப்படுகிறது.

தேவாலயங்கள், கோவில்கள், மசூதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மதத்தலைவர்களை அழைத்து முன்னெச்சரிக்கையாக செயல்படும்படி போலீஸ் அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர். ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் பயங்கரவாதிகள் குறித்து பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். பெங்களூரு நகரில் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்