ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் அருகே துணிகரம்: மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம், மடிக்கணினி திருட்டு

ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் அருகே மருந்து கடையின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மற்றும் மடிக்கணினியை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்று விட்டனர்.

Update: 2019-05-04 23:00 GMT
திருச்சி,

புதுக்கோட்டையை சேர்ந்தவர் கணேஷ்குமார்(வயது35). இவர் திருச்சி ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகிலும், ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் அருகிலும் என்று 2 இடங்களில் சொந்தமாக மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையம் அருகில் உள்ள மருந்து கடையில் ஸ்ரீரங்கம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த நந்தகுமார் என்பவர் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும், மருந்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை மருந்து கடையை திறப்பதற்காக நந்தகுமார் வந்தார். அப்போது மருந்து கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, இரும்பு ஷட்டர் பாதி திறந்த நிலையில் இருந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி கடையின் உரிமையாளருக்கும், ஸ்ரீரங்கம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். உடனே ஸ்ரீரங்கம் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, கடையின் உள்ளே இருந்த பணப்பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அதில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் திருட்டு போயிருந்தது. அத்துடன் மடிக்கணினி ஒன்றும் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

விசாரணையில், மர்ம ஆசாமிகள் சிலர் மருந்து கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் மடிக்கணினியை திருடிச்சென்றது தெரியவந்தது. மேலும் மருந்து கடையின் அருகில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் மர்மஆசாமிகள் வந்து சென்றது பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கடையில் பதிவாகி இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். போலீஸ் நிலையம் அருகே உள்ள மருந்து கடையின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் துணிகரமாக பணம், மடிக்கணினியை திருடிச்சென்ற சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்