தீவுகளை கண்ணாடி படகுகளில் சென்று கண்டுகளிக்கலாம் - வனத்துறை ஏற்பாடு

சூழல் சுற்றுலா திட்டத்தின்கீழ் மன்னார்வளைகுடா கடல் பகுதியில் உள்ள குருசடை தீவு உள்ளிட்ட 4 தீவுகளை கண்ணாடி படகுகளில் நேரில் சென்று கடலின் அழகையும், கடல் உயிரினங்களையும் கண்டுகளிக்க வனத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.

Update: 2019-05-05 22:45 GMT

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் 21 சின்னஞ்சிறிய குட்டி தீவுகள் உள்ளன. இந்த கடல் பகுதியில் அரிய கடல்வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள் உள்ளன. உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அபூர்வ கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் உள்ளதால் இந்த பகுதியை பாதுகாக்கும் வகையில் தேசிய கடல்பூங்கா செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து கடலில் அமைந்துள்ள குட்டிதீவுகளை கண்டுகளித்த சுற்றுலா பயணிகளின் இயற்கை ஆர்வத்தினை பூர்த்தி செய்யும் வகையில் தீவுகளுக்கு அழைத்து சென்று கடல்வாழ் உயிரினங்களை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள குருசடைதீவு, புள்ளிவாசல்தீவு,சிங்கிலி தீவு, பூமரிச்சான் தீவு ஆகிய 4 தீவுகள் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சூழல் சுற்றுலா மையமாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதன் முதல்கட்டமாக தீவுகளை சுற்றிய பகுதிகள் மறுஎல்லை வரையறை செய்யப்பட்டு புதிய மிதவைகள் போடப்பட உள்ளன. ஏற்கனவே போடப்பட்டுள்ள மிதவைகள் சரியான எடை அளவில் இல்லாததால் சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் நிபுணர்கள் இந்த பகுதி கடல் மற்றும் அலைகளின் வேகத்தின் தன்மைக்கேற்ப மிதவைகள் மற்றும் கடலுக்கடியில் இறக்கப்படும் கான்கிரீட் கட்டமைப்புகளை வடிவமைத்து தயாரித்து வருகின்றனர். பாம்பன் குந்துகால் பகுதியில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த மிதவைகள் தலா 500 மீட்டர் இடைவெளியில் 4 தீவுகளை சுற்றிலும் அமைக்கப்படும். இவ்வாறு மொத்தம் 28 மிதவைகள் 4 தீவுகளை சுற்றிலும் அமைக்கப்பட உள்ளன. இந்த சூழல் சுற்றுலா திட்டத்தின்கீழ் 4 தீவுகளையும் சுற்றுலா பயணிகள் நேரில் சென்று பார்வையிட்டு கடல் அழகையும், அதில் உள்ள அபூர்வ கடல்வாழ் உயிரினங்களையும், பவளப்பாறை உள்ளிட்டவைகளையும் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பயணிகள் படகு ரூ.15 லட்சத்திலும், 2 கண்ணாடி படகுகள் தலா ரூ.10 லட்சத்திலும் வாங்கப்பட்டுதயார் நிலையில் உள்ளன.

இந்த படகு சவாரிக்காக பாம்பன் குந்துகால் பகுதியில் ரூ.5 லட்சத்தில் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. குருசடை தீவு பகுதியில் ஏற்கனவே உள்ள ஜெட்டி ரூ.2 லட்சத்தில் மராமத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாம்பன் குந்துகால் ஜெட்டியில் இருந்து ஒரு பயணிகள் படகில் 20 பேரை அழைத்து சென்று குருசடை தீவு பகுதியில் இறக்கிவிடப்படும். அந்ததீவின் அழகை கண்டுகளித்த பின்னர் அங்கிருந்து கண்ணாடி படகில் மற்ற 3 தீவுகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அப்போது கடலுக்கடியில் உள்ள உயிரினங்கள், தாவரங்கள், பவளப்பாறைகள் உள்ளிட்டவைகளை சுற்றுலா பயணிகள் நேரடியாக கண்டுகளிக்கலாம்.

இதன்பின்னர் மீண்டும் குருசடை தீவு பகுதிக்கு கொண்டு வந்து இறக்கிவிட்டு அங்கிருந்து பயணிகள் படகு மூலம் குந்துகாலுக்கு திருப்பி அழைத்து வரப்படுவார்கள். ஒருநாளைக்கு 5 சுற்றுகள் இதுபோன்று அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படகு சவாரி காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறும். இதற்கான டிக்கெட்டுகள் முழுமையாக ஆன்லைன் மூலம் மட்டுமே பதிவு செய்யப்படும். இந்த பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் முடிவடைந்துவிடும். அதிகபட்சமாக ஜூன் மாத தொடக்கத்தில் படகு சவாரி தொடங்க திட்டமிட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுநாள் வரை பாலத்தின் மீது இருந்து கடல் அழகையும், தீவுகளையும் கண்டுகளித்த சுற்றுலா பயணிகள் இனி படகுகளில் சென்று நேரில் இயற்கை அழகை கண்டுகளிக்கலாம்.

மேலும் செய்திகள்