கடலூர் கலெக்டர் அலுவலகத்தில், மேல்கவரப்பட்டு பொதுமக்கள் தர்ணா - இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்ய கோரிக்கை

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மேல்கவரப்பட்டு காலனி பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்கள் ஊர் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை கைது செய்யக்கோரிக்கை விடுத்தனர்.

Update: 2019-05-06 22:30 GMT
கடலூர்,

பண்ருட்டி அருகே மேல்கவரப்பட்டு காலனியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல அமைப்பு செயலாளர் திருமாறன், கடலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி, வக்கீல் பிரிவு மாநில துணை செயலாளர் குருமூர்த்தி, வக்கீல் ஆதவன், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வாசன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அன்புசெல்வனை சந்தித்து மனு அளிப்பதற்காக வந்தனர்.

அவர்களை அங்கு பாதுகாப்புக்காக நின்ற கடலூர் புதுநகர் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் முக்கிய நிர்வாகிகள் 5 பேர் மட்டும் மனு கொடுக்க உள்ளே செல்லுங்கள், மற்றவர்கள் வெளியே நிற்குமாறு கூறினர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மேல்கவரப்பட்டு பொதுமக்கள், எங்கள் ஊர் இளைஞர்களை தாக்கிய கும்பலை கைது செய்யவில்லை. நாங்கள் புகார் கொடுத்தால், போலீசார் வாங்க மறுக்கிறார்கள். இது பற்றி கலெக்டரை நேரில் சந்தித்து பேச வேண்டும். ஆகவே அனைவரையும் உள்ளே அனுப்புங்கள் என்றனர்.

ஆனால் போலீசார் அவர்களை உள்ளே விடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு முக்கிய நிர்வாகிகள் மட்டும் சென்று மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊரை சேர்ந்த 3 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, அவர்களை குச்சிப்பாளையத்தை சேர்ந்த சிலர் தாக்கி உள்ளனர். அவர்களோடு சேர்ந்து மேல்குமாரமங்கலத்தை சேர்ந்த ஒரு தரப்பினரும் தாக்கி, மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தி உள்ளனர்.

இது பற்றி நாங்கள் புகார் கொடுத்தால், போலீசார் மனுவை வாங்கவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆகவே எங்கள் பகுதி இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனுவை பெற்ற கலெக்டர் அன்புசெல்வன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில், அவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்