திருவள்ளூரில் சூறைகாற்றுடன் திடீர் மழை; சாலையில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன, மின்சாரரெயில் போக்குவரத்து பாதிப்பு

திருவள்ளூரில் சூறைகாற்றுடன் நேற்று மாலை திடீரென மழை பெய்தது. இதில் சாலையில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மின்சார ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

Update: 2019-05-07 22:45 GMT

திருவள்ளூர்,

கத்திரி தொடங்கியுள்ள நிலையில் திருவள்ளூரில் கடந்த நில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். நேற்று காலையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்தநிலையில் நேற்று மாலை திருவள்ளூர், ஈக்காடு, மணவாளநகர், ஒண்டிக்குப்பம், வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, திருவூர், செவ்வாப்பேட்டை, திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம் பகுதிகளில் திடீரென பலத்த சூறைகாற்று வீசியது. பின்னர் லேசாக மழை பெய்தது.

சென்னை–திருப்பதி நெடுஞ்சாலை பகுதியான அரண்வாயல் பகுதியிலும் சூறைகாற்று வீசியது. காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அரண்வாயலில் இருந்து முருகஞ்சேரி வரை சாலையோரம் இருந்த 12 இரும்பு மின்கம்பங்கள் சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தன. மேலும் அரண்வாயல் குப்பத்திலும் 6 மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன.

அந்த சமயத்தில் வாகனம் எதுவும் வராததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் உடனடியாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மின்வினியோகம் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே தகவல் அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலத்த காற்றில் சாலையில் சரிந்து விழுந்த மின்கம்பங்களை பார்வையிட்டு அவற்றை உடனடியாக அகற்றி சீர் செய்து காலதாமதம் செய்யாமல் மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அப்போது திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, திருவள்ளூர் டி.எஸ்.பி. கங்காதரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

அரண்வாயல் பகுதியில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததை தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

மேலும் சம்பவ இடத்தில் மின்வாரிய அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மின்கம்பங்களை சாலையில் இருந்து அகற்றினர். சுமார் 1½ மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது. மேலும் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியையும் மின்வாரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே சென்னையில் இருந்து திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு நேற்று மாலை 4.30 மணியளவில் மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் ரெயில் நிலைய நடைமேடை மீது வேப்பமரம் ஒன்று முறிந்து விழுந்தது.

அதில் இருந்த ஒரு கிளை ரெயில்வே மின்சார கம்பி மீது விழுந்தது. இதைக்கண்ட ரெயில் டிரைவர் உடனே ரெயிலை நிறுத்தி விட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் திருவள்ளூர் நோக்கி வந்த புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் திருநின்றவூர் மற்றும் ஆவடி நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டன. இதனால் 45 நிமிடத்துக்கு மேல் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரக்கிளை அகற்றப்பட்ட பின்னர் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

இதேபோல் காஞ்சீபுரம் மேட்டுத்தெரு, காமராஜர் வீதி, பெரிய காஞ்சீபுரம் பகுதிகளில் நேற்று மாலை 5½ மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

இந்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்