மயிலாடுதுறை அருகே, வீடு புகுந்து 4½ பவுன் நகை-பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

மயிலாடுதுறை அருகே வீடு புகுந்து 4½ பவுன் நகை-பணம் திருட்டு போய் விட்டது. இது குறித்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2019-05-09 03:30 IST
குத்தாலம்,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே நல்லாடை சன்னதி தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது 45). கட்டிட மேஸ்திரி. இவர், கடந்த 6-ந் தேதி இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு, காற்றோட்டத்திற்காக வீட்டின் வராண்டாவில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் சாவி மற்றும் பீரோ சாவியை செந்தில்நாதன் தனது தலைமாட்டில் வைத்து தூங்கி கொண்டிருந்தார்.

நேற்று முன்தினம் காலை எழுந்து பார்த்தபோது சாவி காணாமல்போனது செந்தில்நாதனுக்கு தெரியவந்தது. அப்போது வீட்டின் பூட்டு திறக்கப்பட்டு உள்தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. பின்னர் கொல்லைபுற வழியாக சென்று பார்த்தபோது, கொல்லைப்புற கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4½ பவுன் நகை, 150 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.4 ஆயிரம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து செந்தில்நாதன், பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப் பட்டன.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்