புனேயில் கலப்பு திருமணம் செய்த வாலிபரை துப்பாக்கியால் சுட்ட 3 பேருக்கு வலைவீச்சு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

புனேயில் கலப்பு திருமணம் செய்து கொண்ட வாலிபரை துப்பாக்கியால் சுட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-05-09 22:00 GMT
புனே,

புனேயில் கலப்பு திருமணம் செய்து கொண்ட வாலிபரை துப்பாக்கியால் சுட்ட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கலப்பு திருமணம் செய்த வாலிபர்

புனே ராஞ்சேகாவில் வசித்து வருபவர் துஷார் பிசால் (வயது28). இவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் வேறு சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணத்துக்கு பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் புனே - சத்தாரா நெடுஞ்சாலையில் உள்ள போர் பகுதிக்கு சென்றிருந்த போது, துஷார் பிசாலை அவரது மனைவியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பின்னர் குணமானார்.

மீண்டும் துப்பாக்கியால் சுட்டனர்

இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் பூகாவ் என்ற இடத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தார்.

பின்னர் அவர் அங்கிருந்து வீடு திரும்பி கொண்டிருந் தார். அப்போது, அவரை 3 பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தனர்.

இரவு 7 மணியளவில் சாந்தனி சவுக் பகுதியில், பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்த போது, துஷார் பிசாலை பின் தொடர்ந்து வந்த 3 பேரில் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை நோக்கி சரமாரியாக சுட்டார்.

3 பேருக்கு வலைவீச்சு

இதில், 2 குண்டுகள் கழுத்திலும், 3 குண்டுகள் தோள்பட்டை, நெஞ்சு, வயிற்றிலும் பாய்ந்தன. இதில் படுகாயம் அடைந்த அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் விழுந்தார். அவர் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டு இருந்தார். இதையடுத்து அந்த ஆசாமிகள் 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் துஷார் பிசாலை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து துஷார் பிசாலை துப்பாக்கியால் சுட்ட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்