சட்டவிரோத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுங்கள் தானே கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தானேயில் சட்ட விரோதமாக கட்டப் பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2019-05-09 22:15 GMT
மும்பை,

தானேயில் சட்ட விரோதமாக கட்டப் பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுநலன் வழக்கு

தானே மாவட்டம் பிவண்டி தாலுகாவை சேர்ந்த ராகுல் உத்தம் என்பவர் மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதில், பிவண்டி தாலுகாவில் விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த தாலுகாவில் உள்ள சுமார் 60 கிராமங்களில் இவ்வாறு 20 ஆயிரம் சட்ட விரோத கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி பிரதீப் நந்ராஜாக் மற்றும் என்.எம். ஜாம்தார் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அதிகாரிகள் மீது நடவடிக்கை

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், தாசில்தார் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகளை கொண்டு இதற்காக ஒரு குழுவை உருவாக்கி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கலெக்டருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

அதுமட்டும் இன்றி “சட்டவிரோத கட்டிடங்கள் என கண்டறியப்பட்டால், சட்ட விதிமுறைகளின் படி அவற்றை இடிப்பது மட்டும் இன்றி, அத்தகைய கட்டிடங்களுக்கு கண்மூடித்தனமாக அனுமதி அளித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்