ஓட்டு எண்ணிக்கை முடிய நள்ளிரவு ஆகும் கலெக்டர் ராமன் தகவல்

நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை முடிய நள்ளிரவு வரை ஆகும் என்று கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

Update: 2019-05-10 22:30 GMT
வேலூர், 

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை வருகிற 23-ந் தேதி நடக்கிறது. வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியிலும், குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி ஓட்டு எண்ணிக்கை வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியிலும் நடக்கிறது.

இதற்காக ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அங்கு வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஓட்டு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கையில் ஈடுபட இருக்கும் ஊழியர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

இதில் ஓட்டு எண்ணிக்கை பணியில் ஈடுபட இருக்கும் அனைத்து ஊழியர்களும் கலந்துகொண்டனர். அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான பார்த்திபன் முன்னிலை வகித்தார். மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராமன் ஓட்டு எண்ணிக்கையின்போது எவ்வாறு செயல்படவேண்டும் என்பது குறித்து விளக்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஓட்டு எண்ணும் இடத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே யாரும் ஓட்டு எண்ணும் மையத்திற்கு செல்போன் கொண்டு செல்லக்கூடாது. செல்போன் கொண்டு செல்வதன் மூலம் ஓட்டு எண்ணும் இடங்களில் நடப்பவை சமூக வலைத்தளங்களுக்கு சென்று விடுகிறது. எனவே அங்கு நடப்பவற்றை வெளியே தெரியாமல் பாதுகாக்க வேண்டும்.

வழக்கமாக பிற்பகலுக்குள் ஓட்டு எண்ணிக்கை முடிந்து விடும். ஆனால் இந்த தேர்தலில் 23-ந் தேதி நள்ளிரவு வரைகூட ஓட்டு எண்ணிக்கை நடக்கலாம். அல்லது 24-ந்தேதி காலை வரை கூட நடக்கலாம். எனவே நீங்கள் அதற்கு ஆயத்தமாக வரவேண்டும். சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் அதற்கான மருந்து, மாத்திரை, பழங்களை எடுத்து வரலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்