நாகரசம்பட்டி அருகே பத்ரகாளியம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு

நாகரசம்பட்டி அருகே பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த நகை மற்றும் உண்டில் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.

Update: 2019-05-11 22:00 GMT
காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகே கோடிபதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மேலும், ஒவ்வொரு மாதமும் அமாவாசை சிறப்பு பூஜைககள் நடைபெறுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமமக்கள் கோவில் வழியாக சென்றனர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும், அம்மன் கழுத்தில் இருந்த நகையையும் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பழுதாகி உள்ளதை அறிந்த மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்