நாகூரில், சாராயம் கடத்திய 4 பேர் கைது - 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

நாகூரில் சாராயம் கடத்தி வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2019-05-11 22:30 GMT
நாகூர், 

நாகையை அடுத்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது நாகூர் வெட்டாறு பாலம் அருகே வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் புதுச்சேரி மாநில சாராயம் இருந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பனங்குடி சன்னமங்கலம் ஓடை மேடு தெருவை சேர்ந்த அசோகன் மகன் ராஜு (வயது 30), அதே பகுதியை சேர்ந்த சமுத்திரம் மகன் ரஞ்சித் (22) என்பதும், காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜு, ரஞ்சித் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயமும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல, வாழஒக்கூர் பகுதியில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு தெருவை சேர்ந்த குணசேகரன் மகன் ஆனந்தகுமார் (25), அதே பகுதியை சேர்ந்த மணி மகன் சுமன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 110 லிட்டர் சாராயமும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்