புதர் மண்டிகிடக்கும் அரசு சுற்றுலா மாளிகை வளாகத்தை தூய்மைப்படுத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

புதர் மண்டி காட்சியளிக்கும் பெரம்பலூர் அரசு சுற்றுலா மாளிகை வளாகத்தை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-05-12 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் பங்களா அருகே கடந்த 2004–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14–ந் தேதி மறைந்த முன்னாள் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா ரூ.99 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு சுற்றுலா மாளிகை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அந்த சுற்றுலா மாளிகை கட்டி முடிக்கப்பட்டு 2006–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13–ந் தேதி ஜெயலலிதா காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். ஒரு தளத்தை கொண்டுள்ள இந்த சுற்றுலா மாளிகையில் குளிரூட்டப்பட்ட (ஏ.சி.) அறைகளும் உள்ளது. மாளிகையில் அரசு பணிகளில் பணிபுரிபவர்கள் தங்குவதற்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் அரசு பணிபுரிபவர்கள் நிறைய பேர் அலுவலக வேலையாக பெரம்பலூர் வந்தால் சுற்றுலா மாளிகையில் தங்குவது வழக்கம்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19–ந் தேதி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்தார். அப்போது அவரும் சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார். அதற்காக முன்னதாக அந்த சுற்றுலா மாளிகை தூய்மைப்படுத்தப்பட்டு, அதன் வளாகத்தில் அழகு பூ செடிகள் வளர்க்கப்பட்டது. இதனால் சுற்றுலா மாளிகை மிகவும் அழகாகவும் காணப்பட்டது.


கவர்னர் நிகழ்ச்சி முடிந்த பிறகு, அந்த சுற்றுலா மாளிகையை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் தற்போது சுற்றுலா மாளிகை வளாகத்தில் இருந்த பூ செடிகள் எல்லாம் கருகி வாடிப்போய் காணப்படுகின்றன. மேலும் வளாகம் தூய்மைப்படுத்தாததால் செடி, கொடிகள், முட்புதர்கள் வளர்ந்து புதர் மண்டி காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுலா மாளிகை வளாகத்தில் பாம்பு உள்ளிட்ட வி‌ஷ ஜந்துக்கள் வந்து செல்லும் இடமாக மாறி வருகிறது. சுற்றுலா மாளிகை அருகே உள்ள கலெக்டர் பங்களா பகுதியை கடந்த சில மாதங்களாக தொழிலாளர்கள் தூய்மைபடுத்தி வருகின்றனர். ஆனால் புதர் மண்டி கிடக்கும் சுற்றுலா மாளிகை வளாகத்தை தூய்மைப்படுத்தப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுத்தபாடில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் பெரம்பலூர் அரசு சுற்றுலா மாளிகை வளாகத்தை தூய்மைப்படுத்தி, மீண்டும் அழகு பூ செடிகள், தோட்டங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்