கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் விரக்தி: தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-05-12 22:45 GMT
அனுப்பர்பாளையம்,

திருப்பூர் 15 வேலம்பாளையம் தபால் நிலையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன் அனுக்குமார் (வயது 30). தொழிலாளி. இவருக்கும் முருகலட்சுமி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்பு முருகலட்சுமி அனுக்குமாரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இந்த நிலையில் அனுக்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணம் ஆகி 2 குழந்தைகளின் தாயான 30 வயதான பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. கள்ளக்காதலர்களான இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டனர். இந்த நிலையில் அனுக்குமார் அவருடைய தாய் பாக்கியத்திடம் அந்த பெண், தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டார் என்றும், அவரை தனக்கு திருமணம் செய்துவைக்கும்படியும் கூறி உள்ளார்.

மகன் சொல்வதை உண்மை என்று நம்பிய பாக்கியம், அந்த பெண்ணையும், அனுக்குமாரையும் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து சென்றார். இதற்கிடையே மனைவியை காணாததால் அந்த பெண்ணின் கணவர் 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண், அனுக்குமாருடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் தங்கி இருந்த அனுக்குமார், பாக்கியம் மற்றும் அந்த பெண் ஆகிய 3 பேரையும் 15 வேலம்பாளையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் அந்த பெண்ணை அவருடைய கணவருடன் அனுப்பி வைத்தனர். அதன்பிறகு போலீசார் அனுக்குமாரிடம், அந்த பெண்ணை மறந்து விடு. அவளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. மற்றொருவரது மனைவியுடன் பழகாதே என அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

வீட்டிற்கு சென்ற அனுக்குமார் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார். கள்ளக்காதலி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டாளே என அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். பின்னர் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனுக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்