வீட்டை மீட்டு தரக்கோரி லாரி டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

வீட்டை மீட்டு தரக்கோரி லாரி டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-13 22:15 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெறும். நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மக்கள் குறை தீர்வு கூட்டம் உள்பட கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது. எனினும் புகார் கொடுக்க வரும் மக்களிடம் அவர்களின் புகார்களை பெறும்வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதில் புகார் மனுக்களை போட்டு வருகின்றனர்.

இதற்கிடையே மக்கள் குறை தீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டதை அறியாத மக்கள் பலர் திங்கட்கிழமை அன்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வருகின்றனர். நேற்றும் வழக்கம்போல மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவதாக நம்பி மக்கள் பலர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர்.

கலெக்டர் அலுவலக ‘போர்டிகோ’ கீழ் பொதுமக்கள் பலர் அமர்ந்திருந்தனர். இந்த நிலையில் 11 மணி அளவில் ஒரு குடும்பத்தினர் ‘போர்டிகோ’ அருகே திடீரென தலையில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு தீப்பெட்டியால் தீ பற்ற வைத்தனர். ஆனால் தீப்பெட்டி நனைந்ததால் பற்றிக்கொள்ளவில்லை.

இதைப்பார்த்ததும் அருகில் நின்றிருந்த பத்திரிகையாளர்கள் ஓடிச் சென்று அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டில் மற்றும் தீப்பெட்டியை தட்டி விட்டனர். அதைத்தொடர்ந்து அலுவலக ஊழியர்கள் அங்கு வந்து அவர்கள் தலையில் தண்ணீர் ஊற்றி ஆசுவாசப்படுத்தினர்.

தீக்குளிக்க முயன்றவர்கள் கலசபாக்கத்தை அடுத்த நவாப்பாளையம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் திருப்பதி (வயது 42) மற்றும் அவருடைய மனைவி சுமதி (37), மகள்கள் மீனா (15), துர்கா (12) மகன் விமல்ராஜ் (11) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதற்கிடையே தகவல் அறிந்ததும் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வில்சன்ராஜசேகர் அங்கு வந்து அவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது சுமதி அவரின் காலில் விழுந்து தங்களது கோரிக்கையை தெரிவித்தார்.

மேலும் அவரிடம் திருப்பதி கூறியதாவது:-

நாங்கள் வசித்து வந்த பசுமை வீட்டை ரூ.2 லட்சம் கடனுக்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது அண்ணனிடம் அடமானம் வைத்தேன். அவ்வப்போது கடன் தொகையை செலுத்தி விட்டேன். எனது கணக்குப்படி நான் வாங்கிய பணத்தை முழுமையாக செலுத்திவிட்டேன். தற்போது எனது அண்ணன் கூடுதலாக ரூ.10 லட்சம் தர வேண்டும். இல்லையென்றால் வீட்டை எழுதி தர வேண்டும் என்று மிரட்டினார். நான் முடியாது என்று கூறிவிட்டேன்.

இந்த நிலையில் நான் வேலைக்கு சென்ற பின்னர் எனது அண்ணன் வீட்டுக்கு வந்து எனது மனைவி மற்றும் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு வீட்டை பூட்டி சென்று விட்டார். நாங்கள் எங்கு செல்வது என்பது தெரியாமல் நடுத்தெருவில் நிற்கிறோம். எனவே, எங்களது வீட்டை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கலெக்டர் கந்தசாமிக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வீட்டை மீட்டு அவர்களை குடியமர்த்தவும், தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வில்சன்ராஜசேகர் தனது அரசு வாகனத்திலேயே திருப்பதி மற்றும் அவரது குடும்பத்தினரை ஊருக்கு அனுப்பினார். அவர்களுடன் அதிகாரிகளும் சென்றனர். பின்னர் வீட்டின் சாவியை பெற்று திருப்பதியிடம் வீடு ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து மேலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலெக்டர் அலுவலகத்தில் லாரி டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்