சின்னசேலம் அருகே, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

சின்னசேலம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-05-14 22:30 GMT
சின்னசேலம்,

சின்னசேலம் அருகே உள்ளது தகரை கிராமம். இங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகள் நீரின்றி வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து போதிய குடிநீர் வழங்க வேண்டும் என்று சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற அதிகாரிகள், தகரை ஏரி அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று மாலை சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் போர்வெல் எந்திரத்துடன் தகரை ஏரி பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தொடங்கினர். இதுபற்றி தகவல் அறிந்த தகரை வன காப்பாளர் செல்வராஜ், வன காவலர் வேலு ஆகியோர் ஏரி பகுதிக்கு விரைந்து வந்து, வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கக்கூடாது என்று கூறி, பணியை தடுத்து நிறுத்தினர்.

இந்த சம்பவத்தை அறிந்த கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய வனத்துறையினரை கண்டித்து அங்குள்ள நாககுப்பம்-சின்னசேலம் சாலையில் மறியல் செய்ய முயன்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட முயன்ற கிராமமக்களிடம் இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட வனத்துறை அதிகாரியிடம் பேசி உரிய அனுமதி பெற்று ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்