திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களுக்கு வினியோகிக்க மதுரை அடுக்குமாடி குடியிருப்பில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கலா? அதிகாரிகள் தீவிர விசாரணை

திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களுக்கு வினியோகிக்க மதுரை அடுக்குமாடி குடியிருப்பில் கோடிக் கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-05-14 22:45 GMT
மதுரை,

மதுரை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினர் ஆங்காங்கே தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். வாகன ரோந்து பணி போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து பணப்பட்டுவாடா குறித்து புகார்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு புகார் வந்தது. அதில் பொன்மேனியில் ஒரு தனியார் பள்ளி அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணம் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வினியோகிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அந்த தகவல் பறக்கும் படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பெண் அதிகாரி தலைமையிலான குழுவினரும், போலீசாரும் அங்கு சென்றனர். மேலும் இதுகுறித்து வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகள் வருகைக்காக பறக்கும் படையினரும், போலீசாரும் காத்திருந்தனர். ஆனால் 3 மணி நேரம் காத்திருந்தும் அவர்கள் வரவில்லை. எனவே போலீசார், குடியிருப்புக்குள் சென்று சோதனை நடத்தவில்லை. இருப்பினும் இதுகுறித்து அங்கிருந்த சிலரிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பணியாற்றுவதற்காக அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு இடங்களில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில் முன்னாள் எம்.பி. தனது ஆதரவாளர்களுடன் தங்கி உள்ளார். இந்த நிலையில்தான் அங்கு பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று புகார் வந்தது. ஆனால் அதற்கான அறிகுறி தெரியவில்லை. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். கண் காணிப்பு பணியினை தீவிரப்படுத்தி உள்ளோம்” என்றனர்.

மேலும் செய்திகள்