பள்ளிக்கூட பஸ் டிரைவர்களை நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும் : உதவி கலெக்டர் பேச்சு

பள்ளிக்கூட பஸ் டிரைவர்களை நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும் என்று உதவி கலெக்டர் இளம்பகவத் பேசினார்.

Update: 2019-05-16 00:15 GMT

அரக்கோணம், 

அரக்கோணம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் தனியார் பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு ஆய்வு முகாம் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது. ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அலுவலர் பாட்டயப்பசாமி, தாசில்தார் ஜெயக்குமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரக்கோணம் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் வரவேற்றார்.

அரக்கோணம் தாலுகாவிற்குட்பட்ட 41 தனியார் பள்ளிகளில் இருந்து 183 வாகனங்கள் ஆய்வில் இடம் பெற்றன. உதவி கலெக்டர் இளம்பகவத் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஒவ்வொரு பஸ்களில் ஏறி முதலுதவி பெட்டி, அவசர வழி, தீத்தடுப்பு கருவி உள்ளிட்ட 14 விதிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறதா? என்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் உதவி கலெக்டர் இளம்பகவத் பேசியதாவது:–

பஸ்களில் மாணவ–மாணவிகளை ஏற்றி செல்லும் போது டிரைவர்கள் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். வாகனம் ஓட்டும்போது செல்போன் பயன்படுத்தக் கூடாது. தகுதி பெற்ற டிரைவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும். டிரைவர்களுக்கு பள்ளி நிர்வாகம் முறையான ஊதியம் வழங்கி அவர்களை எப்போதும் கண்காணிக்க வேண்டும்,

ஒவ்வொரு நாளும் பஸ்சின் நிலை குறித்த அறிக்கையை பார்த்து அதில் குறைகள் இருந்தால் அதை உடனுக்குடன் சரிசெய்து பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அரக்கோணம் தீயணைப்பு நிலைய அலுவலர், வீரர்கள் சார்பில் பஸ் பயணத்தில் போது ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து எவ்வாறு குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது.

இதில் கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலாளர் டி.எஸ்.ரவிக்குமார், மேலாளர் குமார், தலைமை ஆசிரியர்கள் ரவி, சேகர், துணை தாசில்தார் அருள்செல்வம், வருவாய் ஆய்வாளர் கல்யாணி, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக அலுவலர்கள், ஊழியர்கள், டிரைவர்கள், கிளீனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராணிப்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்