சேத்தியாத்தோப்பில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

சேத்தியாத்தோப்பில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-05-15 22:30 GMT
சேத்தியாத்தோப்பு, 

தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அமல் படுத்துவதில் ஆரம்பத்தில் அதிகாரிகள் அதிக ஆர்வம் காட்டினர். அதன் பின்னர் பெரிய அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவிலலை. இதனால் கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

இந்த நிலையில் தடை உத்தரவு காற்றில் பறந்துவிட்டதாக கூறி ‘தினத்தந்தி’ நாளிதழில் ஏற்கனவே செய்தி பிரசுரம் செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக தற்போது மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், சேத்தியாத்தோப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட கடைவீதி மற்றும் வாரச்சந்தையில் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் தலைமையில் உதவியாளர்கள் செல்வராஜ் சேகர் மற்றும் ஜோதி, பரப்புரையாளர் ராஜ்குமார் ஆகியோர் துப்புரவு பணியாளர்கள் உதவியோடு ஓட்டல், மளிகை, காய்கறி கடைகள் என்று அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அவர்கள் பறிமுதல் செய்தனர். இதன் மூலம் சுமார் 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும் செய்திகள்