2-வது நாளாக பள்ளி வாகனங்கள் ஆய்வு

குமரி மாவட்டத்தில் 2-வது நாளாக மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

Update: 2019-05-15 23:05 GMT
பத்மநாபபுரம்,

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு நேற்று முன்தினம் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 96 பள்ளிகளை சேர்ந்த 260 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டன.

அவற்றை மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் குறைபாடுகள் இருந்த 25 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்றுகள் ரத்து செய்யப்பட்டது.

2-வது நாளாக...

இதையடுத்து 2-வது நாளாக மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு நேற்று கோழிப்போர்விளையில் உள்ள போக்குவரத்து அலுவலக மைதானத்தில் நடந்தது. இந்த ஆய்வுக்கு 192 பள்ளிகளை சேர்ந்த 782 வாகனங்களை ஆய்வுக்கு அனுப்புமாறு அறிவிப்பு அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், 135 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டன.

அவற்றை பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அரி, மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அதிகாரி பழனிசாமி, தக்கலை கல்வி அலுவலர் ராமச்சந்திரன், குழித்துறை கல்வி மாவட்ட அலுவலர் முனியசாமி, திருவட்டார் கல்வி மாவட்ட அலுவலர் ரெஜினி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கனகவள்ளி, தக்கலை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அனுமதி ரத்து

அப்போது, வாகன தகுதிச்சான்று மற்றும் ஆவணங்கள் சரியாக உள்ளனவா?, வாகனங்களின் தரைதளப்பகுதி சரியாக உள்ளதா?, முதலுதவி உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள் போன்றவை இருக்கிறதா?, டிரைவருக்கு உரிய தகுதிகள் உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டன. அதில் சரியாக இருந்த வாகனங்களுக்கு ஆய்வு செய்யப்பட்டதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன.

ஆய்வின்போது குறைபாடுகள் இருந்த வாகனங்களின் தகுதிச்சான்றுகள் ரத்து செய்யப்பட்டன. அவ்வாறு வந்த வாகனங்களில் படிக்கட்டு உயரமாக இருப்பது, தீயணைப்பு தடுப்பு கருவிகள் பொருத்தாமல் இருந்தது போன்ற பல்வேறு காரணங்களுக்காக 29 பள்ளி வாகனங்களை இயக்க அனுமதியை அதாவது தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டது. அந்த வாகனங்களை 7 நாட்களுக்குள் குறைபாடுகளை சரிசெய்து காண்பிக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

நேற்று ஆய்வுக்கு வந்த 135 வாகனங்கள் தவிர மீதமுள்ள 647 வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்