“பா.ஜனதா வெற்றியின் விளிம்பில் இருக்கிறது” தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

“பா.ஜனதா வெற்றியின் விளிம்பில் இருக்கிறது” என்று மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Update: 2019-05-15 23:32 GMT
தூத்துக்குடி,

ஓட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து மாநில பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று முன்தினம் இரவு செக்காரக்குடியில் பிரசாரம் செய்தார். அப்போது, கவிதா என்ற பெண் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் கூலித் தொழிலாளியான தனது கணவர் ரவிச்சந்திரன் கடுமையான இருதய நோயால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது சிகிச்சைக்கு உதவ வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரவிச்சந்திரனை சந்தித்து நலம் விசாரித்தார். அவரது நோய், சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

ரவிச்சந்திரன் பல்வேறு விதமான இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதற்கான சிகிச்சை வசதி தூத்துக்குடி ஆஸ்பத்திரியில் இல்லை. நெல்லை மற்றும் மதுரையில் தான் உள்ளது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள இருதய சிகிச்சை நிபுணரிடம் பேசி உள்ளேன். ரவிச்சந்திரனை நெல்லைக்கு அழைத்து சென்று முழுமையான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். இதுபோன்ற தொழிலாளர்களுக்கு பிரதமரின் காப்பீட்டு திட்டமும், முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டமும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

கமல்ஹாசன் தான் பேசியது தவறு என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்த கருத்தை கமல் திரும்ப பெற வேண்டும். கமல்ஹாசனுக்கு சில அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருப்பது கவலை அளிக்கிறது. பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது. ஆனால், காந்தி கொலையை இந்து தீவிரவாதம் என்று சொல்லும் அளவுக்கு கமலுக்கு யார் தைரியம் கொடுத்தார்கள். அது இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேச வேண்டிய பேச்சே அல்ல. கமலை யாராவது தவறாக வழிநடத்துகிறார்களா? அல்லது இயக்குகிறார்களா? அல்லது அவரே இப்படி தான் கத்துக்குட்டித் தனமாக பேசுகிறாரா? என்பது தெரியவில்லை. தீவிரவாதம் தொடர்பாக பிரதமர் மோடி கூறியிருப்பது சரியான கருத்து. கமல்ஹாசனின் பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்து உள்ளோம். உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே தான் அவர் பேசி இருக்கிறார். எனவே, அவரது பிரசாரத்தை தடை செய்ய வேண்டும்.

எங்களுக்கு எந்த தோல்வி பயமும் இல்லை. நாங்கள் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். மற்றவர்களுக்கு வேண்டுமானால் தங்கள் நிலைப்பாட்டில் சந்தேகம் வரலாம். மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இல்லை என இப்போது கூறும் மு.க.ஸ்டாலின், சந்திரசேகரராவை பார்த்தவுடன் ஏன் சொல்லவில்லை. சந்திரசேகரராவை சந்தித்ததும் தனது நிலைப்பாட்டை ஸ்டாலின் ஏன் தெளிவாக கூறவில்லை. இதனால் அவர்களுக்கு பல முகங்கள் இருக்கிறது என்பது தான் எங்களின் கருத்து. நாங்கள் வெற்றியின் விளிம்பில் இருப்பதால் தான் ஸ்டாலினை போன்றவர்கள் எங்களுக்கு தூது விடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்