தடுப்புச்சுவரில் டேங்கர் லாரி மோதியது : போக்குவரத்து பாதிப்பு

செங்கத்தில் தடுப்புச்சுவரில் டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-05-16 23:15 GMT

செங்கம், 

செய்யாறு பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 38), லாரி டிரைவர். இவர் கரூரில் இருந்து செய்யாறுக்கு பெட்ரோல் ஏற்றிய டேங்கர் லாரியை ஓட்டி வந்தார். செங்கம் நகரில் நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் வந்தபோது திடீரென சாலை தடுப்புச் சுவரில் டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியின் அச்சு முறிந்து டயர்கள் கழன்று தனியே வந்தது. அதிகாலையில் விபத்தில் சிக்கிய லாரியை பகல் 12 மணிக்கு மேலாகியும் அகற்றப்படவில்லை. இதனால் நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகன ஓட்டிகள், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக பஸ்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லாரி அகற்றுவது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கேட்டபோது சரியான பதில் தரவில்லை என புகார் எழுந்துள்ளது.

செங்கம் நகரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலையின் நடுவே இந்த தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் குறுகிய சாலை என்பதால் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலிக்காமல் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. தடுப்புச்சுவரில் ஒளி எதிரொலிக்கும் ஸ்டிக்கர்களோ, எச்சரிக்கை பலகைகளோ வைக்கப்படவில்லை என்பதே விபத்துகளுக்கு முக்கிய காரணம். இந்த தடுப்புச் சுவரை அகற்றக்கோரி பலமுறை வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், வியாபாரிகளும் நெடுஞ்சாலைத்துறையிடமும், பேரூராட்சியிலும் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த தடுப்புச்சுவரில் மோதி 15–க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது. கடந்த வாரம் சுற்றுலா வேன் ஒன்று தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பலர் படுகாயமடைந்தனர்.

அப்போதே சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரை அகற்றக்கோரி நெடுஞ்சாலைத் துறைக்கும், பேரூராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் தடுப்புச்சுவரை அகற்ற இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது மீண்டும் லாரி மோதி விபத்து நடந்துள்ளது. எனவே, உடனடியாக நெடுஞ்சாலைத்துறையும், பேரூராட்சி நிர்வாகமும் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்றி விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்