ஓசூர் அருகே கிராமங்களுக்குள் புகுந்து 12 யானைகள் அட்டகாசம்

ஓசூர் அருகே கிராமங்களுக்குள் புகுந்து 12 யானைகள் அட்டகாசம் செய்தன.

Update: 2019-05-16 23:00 GMT
ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 12-க்கும் மேற்பட்ட யானைகள் நீண்ட நாட்களாக உள்ளன. இந்த யானைகள் நேற்று முன்தினம் இரவு பென்னிக்கல் கிராமம் வழியாக ஜொனபண்டா மற்றும் ஒன்னல்வாடி ஆகிய கிராமங்களுக்குள் புகுந்தன. பின்னர், ஒன்னல்வாடி கிராமத்தில் வெங்கடசாமி என்பவரது வாழை தோட்டத்திற்குள் நுழைந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.

பின்னர் அந்த யானைகள் குட்டிகளுடன் நேற்று அதிகாலை ஜொனபண்டா ஏரியின் அருகே உள்ள தைலமர தோப்புக்குள் புகுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர். மேலும் அவற்றை பட்டாசு வெடித்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இரவு வரை இந்த பணி நடைபெற்றது. தொடர்ந்து யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், யானைகள் கிராமங்களுக்குள் வருவதால் ஜொனபண்டா, ஒன்னல்வாடி, காரப்பள்ளி, எம்.அக்ரஹாரம், சானமாவு, பென்னிக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கிராமங்களுக்குள் அடிக்கடி காட்டு யானைகள் வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்