ஓடும் பஸ்சில் திடீர் மாரடைப்பு பயணிகளை காப்பாற்றி உயிரை விட்ட டிரைவர்

ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் பலியானார். முன்னதாக அவர் பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Update: 2019-05-16 22:30 GMT
மும்பை,

மும்பை தின்தோஷியில் இருந்து நவிமும்பை நோக்கி 523-ம் நம்பர் கொண்ட பெஸ்ட் பஸ் ஒன்று நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் ராஜாராம் கிஷன் என்பவர் ஓட்டி சென்றார். காஞ்சூர்மார்க் அருகே பஸ் வந்த போது டிரைவர் ராஜாராம் கிஷனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால் விபரீதத்தை உணர்ந்த அவர் பஸ்சை நடுவழியிலேயே பிரேக் போட்டு நிறுத்தினார். பின்னர் அப்படியே ஸ்டீயரிங்கில் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்சில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததை டாக்டர்கள் உறுதி செய்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே நடுவழியில் நின்ற பஸ் வேறொரு டிரைவர் மூலம் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது.

இதுகுறித்து அந்த பஸ்சில் பயணித்த ஒருவர் கூறுகையில், ‘‘மாரடைப்பு ஏற்பட்டதும், பஸ்சை நிறுத்தாமல் இருந்து இருந்தால் பெரும் விபத்து நேரிட்டு இருக்கும். அவர் தங்களை காப்பாற்றிவிட்டு, அவரது உயிரை விட்டு விட்டார்’’ என்றார்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்