பெண்கள் கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுகோள்

பெண்கள் கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2019-05-16 22:15 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் நகராட்சி 12-வது வார்டுக்கு உட்பட்ட சங்குப்பேட்டையில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் வசிக்கும் பெண்களின் வசதிக்காக பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் கடந்த 1996-ம் ஆண்டு அதே பகுதியில் பெண்கள் இலவச பொதுக்கழிப்பிடம் கட்டி கொடுக்கப்பட்டது. அந்த கழிப்பிடம் அந்தப்பகுதி பெண்கள், சிறுமிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதற்கிடையே 2010-11-ம் நிதியாண்டில் நகராட்சி சார்பில் அந்த கழிப்பறை பராமரிக்கப் பட்டது. ஆனால் அதன் பின்னர் அந்த பெண்கள் பொது கழிப்பிடம் எவ்வித பராமரிப்பின்றியும், தண்ணீர் வசதியின்றியும் காணப்படுகிறது. மேலும் கழிப்பறைகளின் கோப்பைகள், கதவுகள் சேதமடைந்து காணப்படுகிறது. கழிப்பிடத்தை சுற்றி சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்துள்ளன.

பயன்பாடில்லாமல் போனது

தற்போது அந்த கழிப்பிடம் பயன்பாடில்லாமல் போனது. இதனால் பெண்கள் இயற்கை உபாதை கழிப்பதற்கு திறந்த வெளியை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இரவு நேரத்தில் அந்த கழிப்பிடம் சமூக விரோதிகளின் மது அருந்தும் கூடாரமாக திகழ்ந்து வருகிறது. எனவே நகராட்சி நிர்வாகமானது, அந்த பொதுக்கழிப்பிடத்தில் புதியதாக கழிப்பறை கோப்பைகள், கதவுகள் அமைத்தும், தண்ணீர் வசதி ஏற்படுத்தியும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அந்தப்பகுதியில் வசிக்கும் பெண்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்