கூடலூரில், ஒரே நாள் இரவில் பூத்து காய்ந்த நிஷாகந்தி மலர்கள்

கூடலூரில் ஒரே நாள் இரவில் நிஷாகந்தி மலர்கள் பூத்து கருகின.

Update: 2019-05-17 22:45 GMT
கூடலூர்,

மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக திகழும் கூடலூர் பகுதியில் ஒவ்வொரு காலநிலைக்கு ஏற்ப மலர்கள் பூக்கிறது. இதுதவிர ஆர்க்கிட் உள்பட பல்வேறு ரகங்களும் வனத்தில் மலர் கிறது. இந்த நிலையில் ஒரே நாள் இரவில் பூத்து கருகும் நிஷாகந்தி மலர்கள் கூடலூர் பகுதியில் பூத்து வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.

கூடலூர் அக்ரஹாரம் தெருவில் உள்ள ராமர் என்பவரது வீட்டில் வளர்த்து வந்த செடியில் நிஷாகந்தி மலர்கள் பூத்தது. வழக்கமாக ஒரு செடியில் 7 முதல் 10 பூக்கள் மட்டுமே மலருகின்ற நிலையில் ஒரே செடியில் 30 பூக்கள் பூத்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதேபோல் மண்வயல், தொரப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் சிலரது வீடுகளில் நிஷாகந்தி மலர்கள் வெவ்வேறு நாட்களில் பூத்து வருகிறது.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:-

இமயமலையில் நிஷாகந்தி மலர் செடிகள் வளருகின்றன. நீலகிரி மலைப்பகுதியிலும் நிஷாகந்தி மலர்கள் வெண்மை நிறத்தில் பூக்கிறது. கள்ளிச்செடி இனத்தை சேர்ந்த நிஷாகந்தி மலர் செடிகள் அபூர்வ வகை. பிரம்மகமலம் என பண்டைய காலத்தில் நிஷாகந்தி மலரை குறிப்பிட்டு உள்ளனர். இலைகளின் நுனியில் நிஷாகந்தி மலர்கள் பூக்கிறது.

மற்ற மலர் செடிகளை விட இது முற்றிலும் மாறுபட்டது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கிறது. அதுவும் ஒரே நாள் இரவில் பூத்து அதிகாலையில் கருகி விடுகிறது. நிஷாகந்தியை சீனர்கள் அதிர்ஷ்ட மலர்களாக கருதி தங்களது வீடுகளில் வளர்க்கின்றனர். நள்ளிரவு பூக்கும் போது நறுமணத்தை தருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்