தமிழகம் மற்றும் கேரளாவில் ஓடும் ரெயிலில் பயணிகளிடம் 110 பவுன் நகை கொள்ளையடித்தவர் கைது

தமிழகம் மற்றும் கேரளா வில் ஓடும் ரெயிலில் பயணிகளிடம் 110 பவுன் நகைகள் கொள்ளையடித்த கொள்ளையனை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். திருடிய நகை, பணத்தில் மலேசியாவில் சொந்தமாக ஓட்டல் வாங்கியது விசாரணையில் தெரிந்தது.

Update: 2019-05-17 22:30 GMT
சென்னை,

சென்னை ஜார்ஜ் கோட்டை அதிகாரிகள் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முரளிதரன்(வயது 53). இவர், கடந்த மாதம் 27-ந் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டியில் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்தார்.

இந்த ரெயில் அரக்கோணம் அருகே வந்தபோது முரளிதரன், தனது நகை வைத்திருந்த கைப்பை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அங்கிருந்த டிக்கெட் பரிசோதகரிடம் கூறினார். அவர், அங்கு பணியில் இருந்த ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அதே பெட்டியில் பயணம் செய்த ஒருவர், இரவு முழுவதும் தூங்காமல் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்ததையும் தெரிவித்தார்.

இதையடுத்து ரெயில்வே போலீசார், சம்பந்தப்பட்ட அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்தான், முரளிதரனின் நகைகளை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில் பிடிபட்டநபர், மராட்டிய மாநிலம் தானே பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது (40) என்பது தெரியவந்தது. இவர், தமிழகம் மற்றும் கேரளாவில் ஓடும் ரெயிலில் ஏ.சி. பெட்டியில் டிப்-டாப் ஆசாமி போல் பயணம் செய்து, அனைவரும் தூங்கிய பிறகு அவர்களின் நகைகளை திருடியது தெரிந்தது.

இதையடுத்து ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணனின் ஆலோசனையின்படி துணை சூப்பிரண்டு எட்வர்டு, இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான தனிப்படையினர் இந்த தொடர் திருட்டு சம்பவம் குறித்து புலன் விசாரணை நடத்தினர்.

அப்போது சாகுல் ஹமீது தமிழகம் மற்றும் கேரளாவில் 29 ரெயில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதும், இவ்வாறு திருடிய நகைகளை மும்பை, திருச்சூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான போலீசார் சாகுல் ஹமீதுவை கைது செய்து, மும்பை, திருச்சூருக்கு அழைத்துச்சென்று அங்கு அவர் விற்ற 110 பவுன் நகைகளை மீட்டனர்.

இந்த விசாரணை குறித்து ரெயில்வே டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், நேற்று நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 4 வருடங்களாக தமிழகத்தின் பல்வேறு ரெயில்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சாகுல் ஹமீதை கைது செய்து விசாரணை மேற்கொண்டு அவரிடம் இருந்து 110 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாகுல் ஹமீது ரெயிலின் முதல் வகுப்பு ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்து, பயணிகள் இரவில் தூங்கும்போது திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவார்.

இவ்வாறு திருடிய நகை, பணத்தை கொண்டு அவர் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து உள்ளார். மலேசியாவில் ஒரு நட்சத்திர ஓட்டலையும் வாங்கி உள்ளார். அதில் அவருடைய மனைவி உள்பட 2 பேர் பங்குதாரர்களாக உள்ளனர். சாகுல் ஹமீதுக்கு மும்பையிலும் சொந்தமாக வீடு உள்ளது. அவரது வங்கி கணக்கை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சாகுல் ஹமீதுக்கு 6 மொழிகளில் சரளமாக பேசத்தெரியும்.

சாகுல் ஹமீது திருடிய பொருட்கள் மூலம் 11 நாடுகளுக்கு சென்றுள்ளார். தமிழகத்திலும் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடியும் செய்துள்ளதாக தகவல் வருகிறது. ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் அறிமுகம் இல்லாத நபரிடம் அதிகம் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்