சமூக வலைத்தளத்தில் உள்ள வீடியோவை பார்த்து, ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற டிப்ளமோ என்ஜினீயர் கைது - கடலூரில் சம்பவம்

சமூக வலைத்தளத்தில் உள்ள வீடியோவை பார்த்து, ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற டிப்ளமோ என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். கடலூரில் நடந்த இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-05-17 22:30 GMT
கடலூர்,

கடலூர் வண்ணாரப்பாளையம் சந்திப்பில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த 14-ந்தேதி அதிகாலை 4 மணி அளவில் மர்ம ஆசாமி ஒருவர் பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்றார். அங்கு அவர் ஒரு ரகசிய எண்ணை பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தின் லாக்கரை திறக்க முயற்சித்து பார்த்தார். ஆனால் லாக்கரை திறக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று விட்டார்.

அன்றைய தினம் பகலில் ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்ப வந்த ஊழியர்கள், ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை பார்த்து கொள்ளை முயற்சியை உறுதி செய்து கொண்டனர்.

இதுபற்றி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொள்ளை முயற்சி பற்றி துப்புதுலக்க இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், மணிகண்டன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், ஏட்டு முகிலன், சிலம்பரசன், வினோத்காம்பிளி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து பார்த்த போது, அந்த நபர் ஒரு தனியார் கம்பெனியின் சீருடையில் இருந்ததை கண்டு பிடித்தனர். அது புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியாகும். நேற்று பிற்பகலில் அக்கம்பெனியின் ஊழியர்கள் சிலர் புதுநகர் தலைமை தபால் நிலையம் அருகில் பஸ் ஏறுவதற்காக நின்றுகொண்டு இருந்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரிக்க சென்ற போது, ஒரு நபர் தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது, அவர் நெல்லிக்குப்பம் கல்கிநகரை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் பிரேம்குமார்(வயது 21) என்பதும், ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது.

பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ள பிரேம்குமார், ஏ.டி.எம். எந்திரத்தின் லாக்கரை திறப்பது தொடர்பாக சமூகவலைத்தளத்தில் பதிவிடப்பட்டு இருந்த வீடியோவை பார்த்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக பிரேம்குமார் வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்