திருவண்ணாமலையில் பள்ளி வாகனங்களை கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலையில் பள்ளி வாகனங்களை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

Update: 2019-05-18 23:00 GMT
திருவண்ணாமலை,

கோடை காலம் முடிந்து அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் பள்ளி வாகனங்கள் தரமானதாக உள்ளதா?, அதில் பாதுகாப்பு வசதிகள் சரியாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் வரவேற்றார்.

பின்னர் கலெக்டர் ஆய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார். அப்போது அவர், பஸ் படிக்கட்டுகள் உறுதியாக உள்ளதா?, அவசரகால வழி எளிதில் திறக்கும் வகையில் உள்ளதா?, தீயணைக்கும் சிலிண்டர்கள் உள்ளதா?, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா?, முதலுதவி பெட்டி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கந்தசாமி பள்ளி பஸ்சை ஓட்டி பார்த்தார்.

நிகழ்ச்சியில் டிரைவர்களுக்கு தீயணைக்கும் சிலிண்டர்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் குமார் செயல் விளக்கம் அளித்தார்.

பின்னர் கலெக்டர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 183 பள்ளிகளின் 1,146 வாகனங்கள் 3 கட்டங்களாக தரம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குட்பட்ட 107 பள்ளிகளின் 637 வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. நேற்று முதல் கட்டமாக 327 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் சீராக பராமரிக்காத 20 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அதனை தகுதி நீக்கம் செய்யப்பட்டது.

வருகிற 31-ந் தேதிக்குள் அனைத்து பள்ளிகளும் தங்களது வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்தி சான்றிதழ் பெற வேண்டும். முறையாக பராமரிக்கப்படாத பஸ்கள் தகுதி நீக்கம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பெரியசாமி, மணிபாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆரணி, சேத்துப்பட்டு, போளூர் ஆகிய வட்டத்தில் உள்ள தனியார் பள்ளி பஸ், வேன்களில் மாணவ - மாணவிகளுக்கான பாதுகாப்பு குறித்த ஆய்வு பணி ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்தது. விழுப்புரம் துணை போக்குவரத்து ஆணையர் எம்.கே.சுரேஷ் உத்தரவுப்படி, திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன் மேற்பார்வையில் ஆரணி மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஆரணி உதவி கலெக்டர் மைதிலி கலந்துகொண்டு பள்ளி வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட கல்வி அலுவலர் த.சம்பத், மாவட்ட கல்வி ஆய்வாளர் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட செய்யாறு, வெம்பாக்கம் மற்றும் வந்தவாசி தாலுகாவில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளின் பஸ் மற்றும் வேன்களில் மாணவ- மாணவிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. போக்குவரத்து துறையுடன், பள்ளி கல்வித்துறை, வருவாய்த்துறை இணைந்து செய்யாறு அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் பள்ளி வாகனங்க ளை ஆய்வு செய்யும் பணி நடந்தது.

உதவி கலெக்டர் ஆர்.அன்னம்மாள் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர் பி.பொய்யாமொழி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஜி.மோகன், செய்யாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பள்ளி துணை ஆய்வாளர் எஸ்.புகழேந்தி ஆகியோர் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.

மாவட்ட கல்வி அலுவலர் பி.பொய்யாமொழி பஸ்சை இயக்கி சோதனை செய்து, பஸ்சில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய உத்தரவிட்டார். செய்யாறு பகுதியில் 43 பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த பள்ளிகளுக்கு 226 வாகனங்களில் மாணவர்களை ஏற்றி செல்கின்றனர். அதில் முதல் கட்டமாக 122 வாகனங்களில் ஆய்வு செய்யப்பட்டது.

தகுதியில்லாத வாகனங்களை இயக்கினாலோ, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட கூடுதலாக மாணவர்களை ஏற்றி சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் ஜி.மோகன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்