மஞ்சவாடி கணவாய் பகுதியில் மரங்கள் வெட்ட எதிர்ப்பு லாரிகளை பொதுமக்கள் முற்றுகை

மஞ்சவாடி கணவாய் பகுதியில் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து லாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-05-18 22:15 GMT
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ளது மஞ்சவாடி கணவாய். இந்த பகுதி வனத்துறைக்கு சொந்தமானதாகும். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தேக்கு, சந்தனம், மூங்கில் உள்ளிட்ட மரங்கள் உள்ளன. இந்த மஞ்சவாடி கணவாய் வழியாக தான் சேலம்-சென்னை 8 வழி சாலை திட்டத்திற்கு இடம் அளவீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வனப்பகுதியில் உள்ள காய்ந்த மூங்கில்களை வெட்டி அப்புறப்படுத்த வனத்துறை மூலம் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்பந்தம் விடப்பட்டிருந்தது. இதையொட்டி ஒப்பந்ததாரர்கள் நேற்று அப்பகுதியில் உள்ள காய்ந்த மூங்கில் மரங்களை வெட்டி எடுத்து லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர்.

இது குறித்து அறிந்த சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் ஒப்பந்ததாரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 8 வழி சாலை திட்டம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. மேலும், 8 வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதை கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

எனவே, இப்பகுதியில் கோர்ட்டு உத்தரவு இல்லாமல் டெண்டர் விட முடியாது எனக்கூறி அவர்கள் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்