நாகையில் 10 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து கலெக்டர் சுரேஷ்குமார் நடவடிக்கை

நாகையில் 10 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்றை கலெக்டர் சுரேஷ்குமார் ரத்து செய்தார்.

Update: 2019-05-18 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை ஆயுதப்படை மைதானத்தில் தனியார் பள்ளிகளின் வாகனங்கள் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். இதில் 10 பள்ளி வாகனங்களின் தகுதிச்சான்றை ரத்து செய்து கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு பள்ளி வாகனங்கள் சிறப்பு விதிகள் 2012-ன் படி ஒவ்வோரு ஆண்டும் பள்ளி வாகனங்கள் அனைத்தும் பொதுவான இடத்தில் மாவட்ட அளவிலான குழுவின் மேற்பார்வையில் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாவதை தவிர்க்கும் விதமாக பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று (நேற்று) மாவட்டத்தில் உள்ள 444 வாகனங்களில் 380 வாகனங்கள் தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 345 வாகனங்கள் தகுதியான வாகனங்கள் என சான்றளிக்கப்பட்டன. 25 வாகனங்களில் சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு சரிசெய்யும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

64 வாகனங்கள் பழுது நீக்க பணிகளுக்காக பணிமனையில் உள்ளன. தற்போது பழுதுநீக்கம் நடைபெற்று வரும் வாகனங்கள் மற்றும் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்ட வாகனங்களில் உள்ள குறைபாடுகள் முழுவதும் சரிசெய்யப்பட்டு, மீண்டும் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் தகுதிச் சான்று பெற வேண்டும்.

பள்ளி வாகனங்களை இயக்கும் போது, ஓட்டுநர்கள் செல்போனில் பேசக்கூடாது. இதை மீறினால் அவர்களது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் மது அருந்தும் ஓட்டுநர்களை பள்ளி வாகனங்களை இயக்க பள்ளி நிர்வாகம் அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு விஜயக்குமார், உதவி கலெக்டர் கமல் கிஷோர், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு), அழகிரிசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வக்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்