கமல்ஹாசன் மீது செருப்பு வீச்சு சம்பவத்திற்கு கண்டனம்: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் முத்தரசன் வலியுறுத்தல்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசை முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-05-18 23:00 GMT
அரியலூர்,

வாக்கு எண்ணிக்கை எவ்வாறு நடைபெறும் என்பதில் பெருமளவு அச்சமும், கவலையும் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்திலேயே ஒன்றுபட்ட நிலை இல்லை. தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை. அது யாருடைய நிர்பந்தத்திற்கோ, கட்டாயத்திற்கோ உள்ளாகி கொண்டிருக்கிறது. அந்த நிர்பந்தத்தில் இருந்து தேர்தல் ஆணையம் வெளியே வரவேண்டும் என தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகிறோம்.

மகாத்மா காந்தி கோட்சேவால் சுடப்பட்டது குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்தால் கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் மிக மோசமான நிலைமை நிலவி வருகிறது. ஜனநாயகத்தில் கருத்து சொல்வதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அதேபோல அக்கருத்தை மறுப்பதற்கும் உரிமை உள்ளது. ஆனால் எவ்விதமான வன்முறைக்கும் இடம் கிடையாது. கமல்ஹாசன் பேசுகின்ற கூட்டங்களில் செருப்பு வீச்சு போன்ற வன்முறை செயல்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழகத்தை ஆளுகின்ற அ.தி.மு.க. அரசு பா.ஜ.க.வோடு கூட்டணியாக இருந்தாலும் கூட சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அவர்களிடம் உள்ளது. ஆனால், அந்த கடமையை தவறி வன்முறையாளர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுவது ஏற்க முடியாது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்