துப்புரவு தொழிலாளியை கொன்ற நண்பர்கள் 2 பேர் கைது, மதுக்கடையில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது

திண்டுக்கல்லில் துப்புரவு தொழிலாளியை கொலை செய்த நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் பின்தொடர்ந்து சென்று கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

Update: 2019-05-18 22:30 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் சோலைஹால் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). இவர், திண்டுக்கல் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்தார். நேற்று முன்தினம் இரவு சுமார் 10 மணி அளவில், நாகல்நகர் அரண்மனை குளம் அருகே தனியாக நடந்து சென்றார்.

அப்போது ஆறுமுகத்தை பின்தொடர்ந்து வந்த 2 பேர் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படையினர் கொலையாளிகள் குறித்து விசாரித்தனர்.

விசாரணையில், ஆறுமுகத்தின் நண்பர்களும், சக துப்புரவு தொழிலாளிகளுமான காளிதாஸ் (35), மாரியப்பன் (38) ஆகியோர் ஆறுமுகத்தை குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் ஆறுமுகத்தை கொலை செய்ததற்கான காரணம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-

கொலை செய்யப்பட்ட ஆறுமுகம், காளிதாஸ், மாரியப்பன் ஆகியோர் ஒரே பகுதியில் குப்பைகளை சேகரித்ததால் நண்பர்கள் ஆகினர். தினமும் குப்பைகளில் கிடைக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து பழைய இரும்பு கடையில் விற்று பணத்தை 3 பேரும் பங்கிட்டு கொள்வது வழக்கம். அதேபோல் குப்பைகளை சேகரிப்பதற்கு, ஒருசிலர் கொடுக்கும் பணத்தையும் 3 பேரும் பிரித்து கொள்வார்கள்.

அதன்படி நேற்று முன்தினம் பிளாஸ்டிக் பொருட்களை விற்ற பணத்தை கொண்டு மது குடிப்பதற்கு 3 பேரும் சென்றுள்ளனர். ஆர்.எஸ்.சாலையில் உள்ள மதுக்கடைக்கு சென்று 3 பேரும் மது குடித்தனர். அப்போது 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் சண்டையை விலக்கி விட்டுள்ளனர்.

இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய ஆறுமுகம், அரண்மனைகுளம் சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது ஆத்திரத்தில் இருந்த காளிதாஸ், மாரியப்பன் ஆகியோர் பின்தொடர்ந்து சென்று ஆறுமுகத்தை கொலை செய்து விட்டு தப்பி விட்டனர்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்