தியாகதுருகம் அருகே பரபரப்பு: கோவில் திருவிழா தகராறில் விவசாயி வீட்டில் கற்கள் வீச்சு 2 பேர் கைது

தியாகதுருகம் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் விவசாயி ஒருவரது வீட்டில் கற்கள் வீசப்பட்டன. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-19 22:30 GMT
கள்ளக்குறிச்சி, 

தியாகதுருகம் அருகே முடியனூர் திரவுபதியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் திருவிழா நடைபெற்றது. அப்போது ஊர் தரப்பை சேர்ந்த விவசாயி ஏழுமலை, அர்ச்சுனன் ஆகியோர் கோவில் அருகே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காலனியை சேர்ந்த கந்தசாமி என்பவர் திரும்ப திரும்ப அன்னதானம் வாங்க வந்ததாக தெரிகிறது. இதையறிந்த ஏழுமலை, கந்தசாமியிடம் ஏன் திரும்ப திரும்ப வந்து அன்னதானம் வாங்குகிறாய்? என்றும், மற்றவர்களுக்கும் வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து கந்தசாமி இதுபற்றி தனது பகுதியை சேர்ந்தவர்களிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாராயணசாமி மகன் இளங்கோவன், சாம்ராஜ் மகன் ராஜவேல், ஜனகராஜ், சிபு, அஜித் ஆகியோர் ஒன்று சேர்ந்து ஏழுமலை வீட்டிற்கு சென்று, அவரது வீட்டின் மீது சரமாரியாக கற்களை வீசி சென்றதாக தெரிகிறது.அப்போது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த ஏழுமலை, அவரது உறவினர் பட்டாபிராமன் மனைவி மலர்(50) ஆகியோர் மீது கற்கள் விழுந்ததில், இருவரும் காயமடைந்தனர். பிளாஸ்டிக் குடம் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தது.

இதைபார்த்த அப்பகுதி மக்கள் கல்வீச்சில் காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தால் அங்கு இருபிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதுபற்றி தகவலறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையிலான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஏழுமலை வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, இளங்கோவன்(27), ராஜவேல்(26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஜனகராஜ், சிபு, அஜித் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்