கஜா புயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வெள்ளை ஈ நோயில் இருந்து காக்க முடியாமல் விவசாயிகள் வேதனை

கஜா புயலின் தாக்கத்தில் இருந்து விவசாயிகள் இன்னும் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் புதிய பிரச்சினையாக தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்குதலால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Update: 2019-05-19 22:30 GMT
கீரமங்கலம்,

கடந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதி தாக்கிய கஜா புயலில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களை பலமாக தாக்கியது. இதில் வீடுகள், மரங்கள், மின்கம்பங்கள் என்று அனைத்தும் பலத்த சேதம் ஏற்பட்டன. இதில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், பேராவூரணி, ஆலங்குடி, அறந்தாங்கி தொகுதி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அதிகமாக விவசாயம் செய்யப்பட்டிருந்த தென்னை மரங்கள் 70 சதவீதம் வரை அடியோடு சாய்ந்தன. 10 சதவீதம் தென்னை மரங்கள் சாய்ந்த நிலையிலும், மட்டைகள் உடைந்த நிலையிலும் தன்மை இழந்து நிற்கிறது. மீதம் உள்ள 20 சதவீதம் தென்னை மரங்களே உயிரோடு நிற்கிறது. இதனால் தென்னை விவசாயிகள் மட்டுமின்றி, தேங்காய் வியாபாரிகள் மற்றும் தென்னை சார்ந்த தொழிலாளிகள் என்ற லட்சக்கணக்கான பேர் வேலையிழந்தும் வருமானம் இழந்தும் உள்ளனர்.

இந்தநிலையில் மீதமுள்ள தென்னை மரங்களை காப்பாற்றவும், புதிய தோப்புகளை உருவாக்கவும் புதிய ஒட்டு ரக தென்னங்கன்றுகளை ரூ. ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கி வந்து தோட்டங்களில் நட்டு பராமரித்து வருகின்றனர் விவசாயிகள். மழை இன்மையாலும், மும்முனை மின்சாரம் பற்றாக்குறையாலும் புதிதாக நடப்பட்ட தென்னங்கன்றுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால் புதிய தென்னங்கன்றுகளின் வளர்ச்சியும், புயலில் தாக்கப்பட்டு உயிரோடு நிற்கும் பழைய தென்னை மரங்களின் வளர்ச்சியும் குறைவாக உள்ளது. இதனால் தென்னை விவசாயிகளுக்கு வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் தென்னை மரங்களில் கடந்த சில மாதங்களாக வெள்ளை ஈ நோய் பரவி தென்னை மட்டைகள் கருப்பாகி ஓலைகளில் உள்ள பச்சைகளை அறித்து கருப்பாக காணப்படுவதுடன் மரங்களின் வளர்ச்சி மற்றும் காய்ப்பு திறனை முடக்கி உள்ளது. இதனால் பச்சை ஓலைகள் அதன் தன்மை இழந்து காணப்படுகிறது. இந்த வெள்ளை ஈ நோயை விரட்ட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ஒன்றி இரண்டு மரங்களில் தொடங்கி தற்போது புதிதாக நடப்பட்ட கன்றுகள் முதல் உயரமான மரங்கள் வரை இந்த நோய் பரவி வருவது வேதனையில் உள்ள விவசாயிகளை மேலும் வேதனையடை செய்துள்ளது.

இதுகுறித்து கீரமங்கலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் கூறுகையில், கஜா புயல் தாக்கம் விவசாயிகளின் ஒட்டு மொத்த வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டது. அதிலிருந்து மீளவே சில மாதங்கள் ஆனது. அதன் பிறகு தோப்புகளில் விழுந்து கிடந்த மரங்களை அகற்ற முடியாமல் தவித்தோம். அதற்காக கடன் வாங்கி மரங்களை அகற்றி புதிய தென்னங்கன்றுகளை நட்டு வளர்க்கத் தொடங்கிய நேரத்தில் வெள்ளை ஈ தென்னை மரங்களை தாக்கி வருகிறது. இதனால் மரங்களின் வளர்ச்சி மட்டுமின்றி தேங்காய் உற்பத்தியையும் தடுக்கிறது. அதனால் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் தவிக்கிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தோட்டங்களை பார்த்து நல்ல ஆலோசனைகள் வழங்கினால் விவசாயிகள் மீளலாம். இல்லை என்றால் கனமான மழை பெய்தால் மட்டுமே வெள்ளை ஈ அழியும். விவசாயிகளுக்கு வேதனை மேல் வேதனையாக உள்ளது என்றனர். 

மேலும் செய்திகள்